சிறை என்பது ஒருவரைத் திருத்தும் இடமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல் சிறைக்கும் இன்னொரு பக்கம் இருக்கிறது. அந்த இன்னொரு பக்கத்தை சிறையில் இருந்த கைதிகளின் அனுபவங்களின் மூலமாக இந்த 'சிறையின் மறுபக்கம்' தொடரில் நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
வடசென்னையில் பெரிய பாக்ஸராக வேண்டும் என்கிற கனவோடு இருந்த நாகேந்திரன் ரவுடியானது எப்படி? விவரிக்கின்றனர் அவரது மகன் உள்ளிட்ட குடும்பத்தினர்.
பாக்ஸிங் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட நாகேந்திரன், அதற்காக ஒரு பாக்ஸிங் கிளப்பில் சேர்ந்தார். அங்கு அவருக்கு சில நண்பர்கள் கிடைத்தனர். கொஞ்சம் கொஞ்சமாக ரவுடிகளின் சகவாசம் அவருக்குக் கிடைத்தது. நண்பனின் சகோதரரிடம் தவறாக ஒருவர் நடந்துகொள்ள, அதை எதிர்த்த நாகேந்திரன் கொலை வழக்கில் சிக்கினார். அந்த வழக்கில் அவர் விடுதலையானாலும், கையில் எடுத்த ஆயுதத்தை அவரால் கீழே போட முடியவில்லை. டாஸ்மாக் கடையில் அதிமுக வட்டச் செயலாளர் ஒருவருடன் இவருக்கு தகராறு ஏற்பட்டிருக்கிறது. அவருடைய கொலை வழக்கில் சிறைக்குச் சென்ற நாகேந்திரன் 25 வருடங்களாக சிறையில் இருக்கிறார்.
அவருக்காக எங்கள் குடும்பத்தினர் அனைவரும் சட்டப் போராட்டத்தை மேற்கொண்டனர். ஆனால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. நண்பர்கள் தான் அனைத்தும் என்கிற எண்ணத்தில் அப்போது அவர் வாழ்ந்து வந்தார். ஆனால் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டபோது எந்த நண்பரும் உதவவில்லை. ஒருமுறை அவர் பரோலில் வெளியே வந்தபோது அவரைக் காண ஆயிரக்கணக்கானோர் இங்கு குவிந்தனர். ஆனால் இது போலியான ஒரு வாழ்க்கை என்று அவர் சொன்னார். சிறைக்குள் ஒரு சிறை போல் தான் அவருடைய வாழ்க்கை இருக்கிறது.
எந்தப் பொருளையும் சிறைக்கு உள்ளே எடுத்துச் செல்ல முடியாது. அவர் சிறைக்குச் சென்றதால் எங்களுடைய குடும்பம் கடுமையான பிரச்சனைகளை சந்தித்தது. அம்மா தான் எங்களை நன்றாக கவனித்துக் கொண்டார். எங்களுடைய பாட்டி, அம்மாவையும் எங்களையும் சேர்த்து கவனித்துக் கொண்டார். பாட்டிதான் எங்களுக்கு மிகப்பெரிய சப்போர்ட். அப்பா ரவுடித் தொழிலில் ஈடுபடுவது எங்களுக்கு ரொம்ப நாட்கள் தெரியாது. 2011 சட்டமன்றத் தேர்தலின்போது, வழக்கமாக ரவுடிகளைப் பிடித்து சிறையில் தள்ளும் வழக்கத்தில், காவல்துறை அதிகாரிகள் எங்கள் வீட்டைச் சுற்றி நின்றனர்.
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என்னை அருகில் அழைத்து விசாரித்தனர். "நாகேந்திரன் புள்ளையா நீ?" என்றனர். லயோலா கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருப்பதைத் தெரிவித்தவுடன் "ரவுடி புள்ள நீ.. அந்த காலேஜ்ல படிக்கிறியா" என்று ஒரு அதிகாரி தகாத வார்த்தைகளில் பேசினார். ரவுடியின் பிள்ளை என்றால் படிக்கக்கூடாது என்பது அவர்களின் எண்ணம். இதற்குப் பிறகு தான் நான் சட்டம் படித்தேன். என்னுடைய தாய்க்கு எது தேவை என்றாலும் பாட்டியைத் தான் கேட்க வேண்டும் என்கிற நிலைமை. ஒரு கட்டத்தில் அப்பா சிறையில் படுத்த படுக்கையானார்.
உடல்நிலை சரியில்லாத நிலையிலும் அவர் தனியாக இருக்கிறார். கடைசி காலத்தில் அவரோடு இருக்க வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம். அவருடைய பிள்ளைகளாகிய நாங்கள் இன்று வக்கீல், பத்திரிகையாளர் என்று நல்ல நிலையில் நல்ல குடிமகன்களாக இருக்கிறோம். எங்களுடைய அப்பாவுக்கு அரசாங்கம் உதவ வேண்டும்.