தலைமுறைகளுக்கு இடையே சொத்துச் சண்டைகள் அதேவிதத்தில் தொடர்வதைப் பார்க்கிறேன். இளைய தலைமுறை புதிய சமூக நிலைமைகளின் கீழ் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே முதிய தலைமுறையை மிகவும் கூர்மையாக அது எதிர்க்கிறது. இளையவர்கள், வயது வந்தவர்களின் மூடி மறைக்கப்பட்ட மற்றும் பரபரப்பு மிகுந்த உலகத்திற்குள் நுழையும் ஆர்வத்தில் இருக்கிறார்கள்.
தற்போதைய நாட்களில், இலக்கியம் என்பது சமூகத்தின் நெறிமுறை சார்ந்த சூழலில் ஒரு தீர்மானகரமான தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. சினிமா, விளையாட்டு, ரேடியோ மற்றும் தொலைக்காட்சி போன்றவை இளைய தலைமுறையினரிடையே நேரிடையான தாக்கத்தை மிக அதிகமாகவே ஏற்படுத்துகிறது. ஆனால் இன்றும் கூட சமூகத்திற்கு சேவை செய்ய இலக்கியத்தின் அழைப்பு உண்மையானதாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.
பல்வேறு தரப்பினரின் கருத்துக்களில், எழுத்தாளரின் பங்களிப்பு என்பது கடந்த காலத்தைப் பொறுத்தவரை ஒரு பயிற்றுவிப்பவராக அல்லது போதிப்பவராகவே கருதப்பட்டது. பெரும் போதனைகள் சலிப்பூட்டுவதாகவே இருக்கும், ஆங்கிலக்கதைகளில் எப்போதுமே கலக எழுத்தாளர்கள் இருப்பார்கள் தங்களது சமகால சமூகத்தை விழிப்புணர்வு கொள்ளச் செய்பவர்களாக சமூகக் கட்டமைப்பை அதிரடியாக தாக்குபவர்களாக தங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்.
இளம் மேற்கத்திய எழுத்தாளர்கள், குறிப்பாக லத்தீன் அமெரிக்கர்கள் மனித உணர்வுகளிலிருந்து கலையை அனுமதிக்க முடியாத விதத்தில் பிரித்தெடுப்பதற்கு எதிராக எழுதத் துவங்கியுள்ளார்கள். என்னைப் பொறுத்தவரை நவீன கற்பனைவாதம் என்பதன் அர்த்தம், அனைத்தையுமே மரபுகளிலிருந்து கட்டுப்பாடற்ற வகையில் பிரித்துக் கொண்டு செல்வதுதான். இத்தகைய கண்ணோட்டம் உண்மையிலேயே அறிவுப்பூர்வமாக இருக்கமுடியுமா?
இத்தகைய எழுத்தாளர்கள், பழைய, பாரம்பரிய இலக்கியத்தின்மீது அதிருப்தி அடைந்த எழுத்தாளர்கள். இவர்கள் கலாச்சார வாழ்வின் புதிய தளங்களை திறக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் மனிதனுக்குள் மறைமுகமாக இருக்கிற உணர்வுகளை தள்ளி வைத்துவிட முடியுமா?
முந்தைய கவிஞர்கள் எழுதிய கவிதைகளை புறக்கணிக்க வேண்டும் என்று சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரை பல தருணங்களில் நான் போதிக்க முயற்சி செய்திருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். அனைவருக்குமே நன்றாக தெரிந்த, மிகவும் எளிமையான விசயங்களை நான் போதித்திருக்கிறேன். அதனால்தான், ரோஜாவும் நிலாவும் காலத்தை கடந்தும் புதிய தலைமுறைக் கவிஞர்களாலும் கவிதைப் பொருளாக வர்ணித்துப் பாடப்படுகிறது. முந்தைய கவிஞர்கள் பாடியதைக் காட்டிலும் புதிய கோணத்தில் இவற்றை பாடும்போதுதான் அவை நம்மிலிருந்து அந்நியப்படாமல் இருக்கும். இத்தகைய பார்வைதான் எந்த ஒரு கலைஞனையும் புதுமையாக வைத்திருக்க உதவும். மேலும் இந்த உலகினை பாரபட்சமில்லாமல் மிகச்சரியான முறையில் தனக்கே உரிய பாணியில் விவரிக்க முடியும். கவிதை எழுதும்போது, நான் புரிந்துகொள்ளாத விசயங்களை ஆராய்ச்சி செய்ய, நானும்கூட அடிக்கடி முயன்றிருக்கிறேன். ஒரு மர்மத்தை நம்பும்வகையில் சொல்வதுதான் உள்ளார்ந்த கவிதையாகும். இவற்றை ஒன்றாக சேர்ப்பதன் மூலம் ஒரு உண்மையான கவிதையின் பொருளும் அதன் நோக்கமும் ஒன்றுக்கொன்று உண்மையானதாக இருக்கிறது.
ஒரு கதையை மதிப்பீடு செய்யும்போது, அதில் மூடநம்பிக்கைகள் மற்றும் உண்மைக்குப் புறம்பான கருத்துகள் இல்லாதபட்சத்தில், வேறு எந்தத் தவறுகளை ஆசிரியர் செய்திருந்தாலும் அவற்றை மன்னிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். நோயை அறிவதற்கு முன்னரே எழுதப்படும் இலக்கியத்தனமான மருந்து பரிந்துரை மருத்துவருக்கும் நோயாளிக்கும் ஆபத்து விளைவிக்கும். அதாவது முழுமையடையாத ஒரு இலக்கியப்படைப்பு எழுத்தாளருக்கும் வாசகருக்குமே பயனளிக்காது. ஒவ்வொரு கதையும் இந்த உலகத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கவேண்டியது அவசியம். அது எதிர்கால கலைகளை செறிவூட்டுவதாக இருக்கும்போது மட்டுமே காலத்திற்கு பொருத்தமானதாக இருக்கும்.
லிட்டரேச்சர்நயா கெஜட்,
செப்டம்பர் 1, 1962
முந்தைய பகுதி:
கவிஞர்களும் மக்கள் போராட்டங்களும்...! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி - 9
அடுத்த பகுதி:
சிலி தேசம் வாழ்க! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி - 11