அத்தியாயம் 24
குழந்தை கீழே விழுந்து அடிபட்டால், அதை யாரும் பார்க்கவில்லை என்றால், குழந்தை எழுந்து எதுவும் நடக்காதது போல போய்க்கொண்டே இருக்கும். இதுவே யாராவது பார்த்துவிட்டால் அழுது ஆர்ப்பாட்டம் செய்யும். அதேபோல கவியும் தன்னை யாரும் பார்க்கவில்லை என்று நினைத்து, எந்தப் பயமும் இல்லாமல் வந்து அம்மாவின் அருகில் அமர்ந்தாள்.
"யார் அவங்க " என்று திலகா கேட்டதும்,
"எவங்க" என்று பதில் கேள்வி கேட்டாள் கவி.
"அதோ அந்த டேபிளில் மஞ்சள் கலர் சுடிதார் போட்டிருக்காங்களே, அந்தப் பெண்" என்று திலகா சுட்டிக்காட்டினார்.
"மஞ்சள் கலர் சுடிதாரா" என்று பார்வையைப் பாயவிட்டவள், லேகாவை பார்த்தாள், ஓ.. லேகாவைத்தான் சொல்றாங்கன்னு புரிந்துகொண்டு,
"அவங்க யாருன்னு தெரியாது மா" என்றாள்.
"பிறகு எதுக்கு அவங்க டேபிள் பக்கத்துல நின்ன? அப்பறம் அவங்க கர்ச்சிப்பை எடுத்துகிட்டு வந்த" என்று சந்தேகத்துடன் குடைந்தார் திலகா.
"அம்மா... அவங்க டேபிள் அருகில் போகும்போது என் கர்ச்சிப் தவறி விழுந்துவிட்டது. அதை எடுத்து வந்தேன்" என்று சமாளித்தாள் கவி.
கவி எழுந்து வாஷ் பேசின் நோக்கிப் போனதிலிருந்து கவியையே கவனித்துக்கொண்டிருந்த திலகாவிற்கு கவியின் பதில் திருப்தி அளிக்கவில்லை. இருந்தாலும், அந்த எண்ணங்களில் இருந்து வெளியே வந்த திலகா காபியை ரசித்துக் குடிக்க ஆரம்பித்தார்.
கவியும் அம்மா இத்தோடு விட்டார்களே என்று பெருமூச்சு விட்டுக்கொண்டு காபியை ருசிக்க ஆரம்பித்தாள். பாவம் கவி, அம்மாவிற்கு இவளிடம் ஏற்பட்டிருக்கும் சந்தேகம் என்னும் சீரியலுக்கு விளம்பர இடைவேளைதான் விட்டிருக்கிறார். மீண்டும் தொடர்வார் என்பதெல்லாம் தெரியாத மனநிலையில் காபியை ரசித்துக் குடித்தாள். இனிப்பு தொண்டைக் குழிக்கு ஹாய் சொன்னது.
இருவரும் எழுந்து வெளியே வரும்போது கவியின் பார்வை லேகாவின் டேபிள் பக்கம் திரும்பியது. லேகா கட்டைவிரலை உயர்த்தி "ஒகே வா" என்றாள். கவியும் அம்மாவின் முதுகுக்குப் பின்னால் சென்றுகொண்டே கட்டைவிரலை உயர்த்தி ஓகே சொல்லிவிட்டு, ஆள்காட்டி விரலை உயர்த்தி ஒற்றை விரலால் நெற்றியில் விழுந்த முடியைச் சரிசெய்வது போல் லேகாவிற்கு டாடா சொல்லிவிட்டு நடந்தாள்.
அம்மாவுடன் துணிக்கடைக்குச் சென்ற கவிக்கு மனம் முழுவதும் பென் டிரைவில் இருக்கும் செய்தியிலேயே இருந்தது. 'தியா என்ன சொல்லியிருப்பாள்? அவளுக்கு பள்ளியில் என்ன கொடுமை நடந்திருக்கும்?' என்ற எண்ணமே கவியின் மனதினில் சுனாமியாகச் சுழற்றி எடுத்தது.
"கவி இந்த கலர் நல்லாயிருக்கா" என்று அம்மா கேட்டதற்கு,
"ம்" என்ற ஒற்றை எழுத்தைப் பதிலாக்கினாள்.
திலகா கடையையே புரட்டிப் போட்டு புடவைக் குன்றுகளை உருவாக்கினார்.
கவியோ ஒரு சேரில் உட்கார்ந்து தியாவை பற்றியே நினைத்துக்கொண்டிருந்தாள். திலகாவோ ஓரக்கண்ணால் கவியை கவனித்தார்.
ஒருவழியாகப் பாதி கடையைப் புரட்டி, ஒரு பெரிய துணி பண்டிலுக்குப் பில் போட்டுக்கொண்டு கிளம்பினார் திலகா.
காரில் வரும்போது ஷாலு ஃபோன் பண்ணினாள். ஃபோன் எடுத்தால் தியாவைப் பற்றிப் பேசுவாள். அதனால் அம்மாவின் எதிரில் அவளுடன் பேச விரும்பாமல் ஃபோனை கட் பண்ணினாள்.
திலகாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. ஃபோனில் ஷாலு பேரைப் பார்த்துவிட்டார். கவி ஏன் பேசாமல் கட் பண்ணுகிறாள்? தோழிகள் பசங்கள சைட் அடிப்பதைக் கூட என் எதிரில் பேசறவங்க, இப்ப என்ன இருக்கு இவங்களுக்குள் ரகசியம்? என்று திலகாவின் மனம் கல்லெறிந்த குளமானது.
வீட்டிற்கு வந்ததும் அவசர அவசரமாக காரைவிட்டு இறங்கி வேகவேகமாக தன்னுடைய அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டாள் கவி. லேப்டாப்பை எடுத்து பென்டிரைவை கனெக்ட் பண்ணினாள். அதே நேரம் அவளுடைய லேப்டாப் ‘ஹேக்’ பண்ணப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ந்தாள்.
( திக்திக் தொடரும்)
சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #23