![detective-malathis-investigation-33](http://image.nakkheeran.in/cdn/farfuture/d_d3e21Wr0Ty2R89ezTcIJtBc9-gCppUmMznO-kxPJ8/1702990758/sites/default/files/inline-images/Malathi33.jpg)
தான் கையாண்ட துப்பறியும் வழக்குகள் குறித்து முதல் பெண் துப்பறிவாளர் மாலதி நம்மிடையே பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கணவரை கண்காணிக்கச் சொன்ன மனைவியைப் பற்றிய தகவல்களை விவரிக்கிறார்.
இரண்டாவது குழந்தை பிறந்ததிலிருந்து கணவர் தன் மீது பாசமாக இல்லை என்றும், எதற்கெடுத்தாலும் கோவப்பட்டு திட்டுகிறார் என்றும் அவருக்கு வேறு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமா என்று அவரைப் பின் தொடர்ந்து தகவல் தர வேண்டும் என்று ஒரு பெண் வந்தார்.
நாமும் அவரது கணவரின் தகவலைப் பெற்றுக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்தோம். தினமும் அலுவலகம் போகிறவர் மாலை ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்குள் போகிறார். கொஞ்ச நேரம் கழித்து வீட்டிற்கு வந்து விடுகிறார். எங்களால் அந்த பிளாட்டுக்குள் போய் அங்கே யார் இருக்கிறார்கள் என்று பார்க்க முடியவில்லை. பத்து நாட்களாக காத்திருந்தோம்.
ஒரு நாள் அந்த கணவர் வேறொரு பெண்ணோடு மகாபலிபுரம் சென்றார். நாமும் அவரைப் பின் தொடர்ந்து அந்த பெண்ணோடு இருக்கும் படங்களை எடுத்து வந்து நமக்கு வழக்கு கொடுத்த பெண்ணிற்கு தகவல் சொல்லி அலுவலகத்திற்கு வரச் சொன்னோம். இரண்டாவது குழந்தை பிறந்து ஆறு மாதம்தான் ஆனதால் அவரிடம், உங்க கணவருக்கு இன்னொரு பெண்ணோடு தொடர்பு இருக்கிறது என்பதை பக்குவமாக எடுத்துச் சொன்னோம்.
தகவலைக் கேட்டதும் வருந்தியவருக்கு ஆறுதல் சொன்னோம், இதெல்லாம் பெரியவர்களை வைத்துப் பேசி சரி செய்யக்கூடிய பிரச்சனைதான் என்றோம். சரி என்று கேட்டுக்கொண்டு அந்த பெண்ணை போட்டோ எடுத்தீர்களா என்றார், எடுத்திருக்கிறோம் என்று காட்டினோம், போட்டோவைப் பார்த்தவர் மயங்கி விழுந்து விட்டார்.
முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்பி என்னாச்சு என்றவர், நமக்கு ஒரு அதிர்ச்சி தகவல் சொன்னார், தன் கணவரோடு படத்தில் இருப்பது தன்னோடு கூடப் பிறந்த தங்கை என்று சொன்னார். தன்னுடைய பிரசவத்திற்காக கொஞ்ச நாள் உதவிக்கு இருந்தவர், பிறகு ஹாஸ்டலுக்கு சென்றுவிட்டார் என்றார். ஆனால் அவர் ஹாஸ்டலுக்கு செல்லாமல் தனி பிளாட் எடுத்து தங்கியிருப்பது கண்டறிந்து சொன்னோம். பெரியவர்களை வைத்துப் பேசி சரி செய்து கொள்ளுங்கள் என்று வழக்கை முடித்தோம்.