Skip to main content

காதலன் ஏமாற்றியதாக புகார்; காதலிக்கு காத்திருந்த ட்விஸ்ட் - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 30

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

detective-malathis-investigation-30

 

காதலித்து ஏமாற்றினால் ஆண் தான் பிரச்சனை செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சில சமயங்களில் பெண்களும் வீடு புகுந்து மிரட்டுகிற செயல் எல்லாம் நடக்கத்தான் செய்கிறது. அப்படியான ஒரு சம்பவத்தையும் அதில் பெண் தரப்பை விசாரித்தது குறித்து முதல் பெண் துப்பறிவாளர் மாலதி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

தன்னுடைய மகன் காதலித்ததாகவும், பின் தன்னை விட்டு விலகி விட்டதாகவும் ஒரு பெண் தன்னுடைய வீடு தேடி வந்து குடும்பத்தினரின் முன்னிலையில் மிரட்டிச் சென்றதால் அந்தப் பெண் எப்படிப் பட்டவர் என்பதையும் தன்னுடைய மகன் மீது தப்பு இருக்கிறதா அல்லது அந்த பெண் மீது தவறு இருக்கிறதா என்பதைக் கண்டறிய வேண்டும் என்று நம்மை அணுகினர். ஒரு வேளை தன் மகன் மீது தான் தவறு என்றால் அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்கிற முடிவிலும் அவர்கள் இருந்தார்கள் என்பதையும் குறிப்பிட்டார்கள்.

 

அந்த பெண்ணை பின் தொடர்ந்தோம். மிகவும் பொருளாதார ரீதியில் பின் தங்கிய குடும்பம். அம்மா இல்லை, அப்பா மட்டுமே மேலும் மாற்றுத்திறனாளியான அக்காவும் இருந்தாள். அந்த குடும்பத்தில் இந்த பெண்ணின் வருமானத்தைக் கொண்டு தான் வாழ்ந்து வந்தார்கள். அதனால் அவர்களுக்கு தன்னுடைய வருமானம் திருமணத்திற்கு பிறகும் போய்ச் சேர வேண்டும். அதே சமயத்தில் தானும் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று நம்மிடம் விசாரிக்கச் சொன்ன குடும்பத்து பையனை விரும்பி இருக்கிறாள். அவளது நோக்கமெல்லாம் நல்லது தான். இன்றைய காலத்து அனைத்து பெண்களும் நினைப்பது தான்.

 

ஆனால் காதலர்களுக்குள் முரண் வந்ததும் அதை சரி செய்யாமல் உடனடியாக இன்னொரு பையனுடனும் பழக ஆரம்பித்திருக்கிறாள். மிகவும் நெருக்கமான உறவாகத்தான் பழகவும் செய்திருக்கிறாள். அதே சமயம் இவனையும் மிரட்டி திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள் என்ற ரிப்போர்ட்டை பையனின் குடும்பத்திற்கு கொடுத்தோம். பிறகு அவர்களே பேசி ஒரு முடிவை எடுத்துக் கொண்டார்கள். 

 

பெண்கள் தங்களுக்கு என்ன வேண்டும், வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கும் பட்சத்தில் அதை பெறுவதற்கு நியாயமான முறையினை கையாள வேண்டுமே தவிர இது போன்ற மிரட்டுதல், அடிபணிய வைத்தல் போன்றவற்றை செய்யக்கூடாது. அது நிலைத்திருக்காது.