Skip to main content

’புதினப் புயல்’ இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்...! சூட்சும உலகம் #1

Published on 14/08/2021 | Edited on 14/08/2021

 

ilamathi padma sootchama ulagam part 1

 

அத்தியாயம் - 1

 

சூரியக் கதிர்கள் மெல்ல மெல்ல சென்னையை நனைக்கத் தொடங்கிய அதிகாலைப் பொழுது, அவரவர் வேலைக்கும் தேவைக்கும் ஏற்றவாறு கண்விழித்து, கடனே என்று கடமையாற்றிக் கொண்டிருக்க... மாலா... விடியலை ரசிப்பதற்காகவே பால்கனியில் வந்து நின்று கொண்டாள். உயிர்சக்தியான பிராணவாயுவை  ஆழமாய் சுவாசித்து நுரையீரலை நிரப்பினாள். இது தினமும் நடக்கும்  வழக்கான நிகழ்வுதான்! ஆனாலும்... பிரபஞ்சத்தோடு ஒன்றிவிடும் இந்த  நிகழ்வை ஐந்தாறு நிமிடங்களாவது ரசிக்கவில்லையென்றால்... பிரியமான ஒன்றைத் தவற விட்டதற்காகத் தன்னையே அவள் விரும்ப மாட்டாள். 

 

அத்தகைய சூழல் மாதத்தில் மூன்று நாட்கள் வரவே செய்தது.

 

"மாலா... இந்த சமயத்திலாவது குளிச்சுட்டு வெளியே வா." அம்மாவின் அதட்டல் குரல் ஒலிக்கும்போது  சர சரவென மேலேறும் சினத்தை மிகவும் சிரமப்பட்டு அடக்கினாலும், சில நேரம் வெளிப்படவே செய்யும். பெண்ணின் இயல்பான உடல் இயக்கத்திற்கும் சட்டதிட்டங்களைப் போட்டு, தொலை தூரத்தில் தனியே நிறுத்துவதும், யார் கண்ணிலும் படாதே என்பதும் கொடுமையில்லையா... இதென்ன சர்வாதிகாரம்...? என்று வெடிப்பாள்.

 

"காத்துக் கறுப்பு அண்டக் கூடாது என்றுதான் பெரியவங்க சொல்லி வச்சிருக்காங்க. உன்னை மாதிரி நான்  குறுக்குக் கேள்வி கேட்டதில்லை. பெரியவங்க நல்லதுக்குதான் சொல்வாங்கனு நம்பணும்!"

 

"நீ சொல்ற காத்தும் கறுப்பும் நல்லதுதான். ஒரு தீங்கும் செய்யாது. உன்னை மாதிரி மனிதர்கள்தான் பிரச்சனையே...” என்று முணுமுணுப்பாய் பேசினால் கூட,  அம்மா கற்பகத்தின் செவியில் விழுந்து தொலைக்கும்!

 

"சும்மாவே நீ சண்டி! போதாக் குறைக்கு உன் சின்ன தாத்தா வேறு உசுப்பேத்தி விடுறாரு. அடுத்த முறை ஊருக்கு உன்னை அழைச்சுட்டுப் போறதா இல்லை” என்று அம்மா தடாலடியாய் பேசுவாள். பேச்சோடு சரி! மாலா இல்லாமல் கற்பகத்துக்கு முடியாது. மாலா சிறுமியாக இருந்த போது...." நீதான் தலைப்பிள்ளைனு யாரிடமும் சொல்லக் கூடாது. யார் எது சாப்பிடக் கொடுத்தாலும் வாங்கக் கூடாது,  ஆளரவம் இல்லாத இடத்தில் தனியாகப் நடக்கக் கூடாது. அறிமுகமில்லாதவர்கள் பேசினால் பதில் சொல்லக் கூடாது."  இப்படி ஏராளமான கூடாதுகளை வரிசையாகச் சொல்லும் போது, "ஏன்" என்ற கேள்விக்குப் பதில் வராது. அத்தனை கேள்விகளையும் சுமந்து கொண்டு, தனது தாத்தாவின் தம்பியான பொன்ராஜிடம் போவாள். அத்தனைக்கும் தாத்தா விளக்கமாகப் பதில் சொல்வார். அம்மாவின் ஆழ்மன பயங்கள் பற்றி விளக்குவதோடு,  நீ தைரியமான பெண்ணல்லவா... ? என்ற கேட்பதோடு, எள்ளுப் பாட்டி பேயை அடக்கி சுடுகாட்டு மரத்தில் கட்டிப் போட்ட கதைகள் எல்லாம் சொல்லி தைரியத்தை வளர்த்தவர்.

 

ஒரு சமயம் உறவு முறையில் பாட்டியான கிருஷ்ணம்மா வீட்டில் கல் வைத்த அட்டிகை தொலைந்து  போனதும், அது குறித்து வீட்டில் உள்ள அனைவரிடமும் விசாரித்துவிட்டு, மை போட்டுப் பார்க்கும் ஒருவனை  அழைத்து  வெற்றிலையில் மை தடவிப் பார்க்க ஏற்பாடு செய்தாள். தாய்க்குத் தலைச்சன் பிள்ளைகளின் கண்களுக்குத்தான் அந்தக் காட்சி கண்ணில்படும் என்று மாலாவை அழைத்துக் கொண்டு போய்  உட்கார வைத்தபோது.... கற்பகம் பதைபதைப்புடன் ஓடி வந்தாள் " ஏ... கிருஷ்ணம்மா... என் பொண்ணுதான் கிடைச்சாளா உனக்கு.... உன் பிள்ளையை உட்கார வைக்க வேண்டியதுதானே.".. என்று சத்தம் போட்டவள் மாலாவை அடித்து இழுத்துக் கொண்டு வந்தாள்.

 

"அம்மாவிடம் சொல்லாமல் போவியா.... போவியா...” என்று ஒரு குச்சியால் விளாச... இரண்டு நாட்கள் ஜூரத்தில் கிடந்ததும், அம்மா அவளைத் தடவிப் பார்த்து அழுததும், தாத்தா பாட்டியின் கோபத்திற்கு ஆளானதும் தனிக்கதை!

 

தான் தூங்கி விட்டதாக நினைத்து பாட்டியும், அம்மாவும் பேசிக்கொள்வதைக் கவனமாகக் கேட்பாள் மாலா. "மாலா சொல்வது உண்மைதான் மா.  கொடுக்காப்புளி  மரத்தில் ஒரு கொள்ளி வாய் பிசாசு உட்கார்ந்திருப்பதை நானே பார்த்திருக்கேன். அதை முதலில் வெட்டணும்."

 

"பக்கத்து வீட்டுக்காரன் கேட்பானா... எல்லாத்துக்கும் மல்லுக்கு நிற்பானே..”என்று பாட்டி சொல்ல...

 

"அதைப் பத்தி எனக்குக் கவலையில்லை என் புள்ளதான் எனக்கு முக்கியம்" என்றவள் மறுநாளே... மரம் வெட்ட ஒரு ஆளை வரவழைத்தாள்.

 

"ஆம்பளை இல்லாத நேரம் பார்த்து வம்பா மரத்தை வெட்ட வரீங்களா...” என்று வேண்டாத வார்த்தைகளில் பக்கத்து வீட்டுக்காரியின் வசைமொழி துவங்கியதும்,  மாலா  ரெளத்ரமானாள். தன் தாயைப்  பேசியவளை, உட்காரும்  மனப்பலகையால் அவள் முதுகில் ஓங்கி ஓங்கி அடிக்க, நாலடியில் அவள் மடங்கி விழ, அக்கம் பக்கத்தில் இருப்போர் ஓடி வந்து மாலாவை அதட்டினர். பிரச்சனை பூதாகரமாய் வெடித்ததில், மிரண்டாளே தவிர, அதன் பிறகு கண்களில் எந்த உருவம் தென்பட்டாலும் மிரள்வதில்லை. தாத்தா கொடுத்த தைரியத்தில் உறுதியானாள்.  கூர்ந்து கவனிக்கும் பழக்கம் வந்தது.  பள்ளிப் படிப்பு முடிவதற்குள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் அடுக்கடுக்காய் நிகழ்ந்தன. பாட்டியின் மரணம்! அப்பாவின் வேலைமாற்றம். சென்னை வருகையும் மாற்றங்களில் ஒன்று.

 

மிச்சமுள்ள 8, 9, 10 வகுப்புகள் முடிந்து +2 முடிக்க ஓராண்டு இருந்த போது  அப்பாவிற்கு  மீண்டும் பணிமாற்றம். இம்முறை வேறு மாநிலம், வேறு மொழி.குடும்பத்தை அழைத்துப்  போக முடியாதபடியான சூழல். மாலாதான் அப்பாவை  தைரியப்படுத்தி அனுப்பினாள். மாலா தைரியமானவளாக இருந்தாலும் கூட,  கற்பகம் அவளைத்  தனியே வெளியே அனுப்பத் தயங்குவாள். ஆணாகப் பிறந்திருக்கக் கூடாதா... என்ற  ஏக்கம் இருக்கவே செய்தது.

 

ஒருநாள் அதிகாலை எழுந்து கொள்ள முடியாத அளவிற்கு  கற்பகத்திற்கு சோர்வும் கிரக்கமும் அதிகமாக,  அருகிலிருந்த மருத்துவரைப் பார்க்கச் சென்றாள். பரிசோதித்த மருத்துவர் கர்பத்தை உறுதி செய்தும் திகைத்துப் போனாள். " இல்லை டாக்டர் சரியா பார்த்து சொல்லுங்க. மாதம் தவறாமல் மாதவிலக்கு வரும் போது... இது எப்படி"...?

" ரிசல்ட் அப்படித்தான் வந்திருக்கு."

" 16 வயதில் மகள் இருக்கா... இதை கலைக்க முடியாதா."..?

" நாலு மாதம் முடியும் வரை உனக்குத் தெரியலைனா எப்படி... இப்ப ஒன்னும் செய்ய முடியாது. பெத்துக்கிறதுதான் நல்லது." என்று சொல்ல, வீடு திரும்பிய கற்பகம்  மாலாவிடம் எப்படி இதைச் சொல்வது...? சொன்னால்....  அவள் எளிதாக எடுத்துக் கொள்வாளா... என்ற கேள்வி எழவே செய்தது. அநேகமாய் டாக்டர் சொன்ன தேதிக்குள் மாலாவின் தேர்வுகள் முடிந்துவிடும் என்பதில் மனம் சற்று லேசானது.  யாரையாவது துணைக்கு அழைத்தால் வருவார்கள்தான். ஆனால்... யாரை அழைப்பது.... என்ற கேள்வியும் எழ.... 

 

யோசித்தபடியே  இருந்தவளுக்கு,  சட்டென தன் ஒன்று விட்ட அக்கா நினைவிற்கு வர, உடனே போனில் அழைத்தாள். தன் நிலையைச் சொல்லி வரமுடியுமா என்று கேட்டாள். குழந்தை பிறந்த பிறகு இரண்டு மூன்று மாதங்கள் இருந்தால் போதும் கா. யோசித்துச் சொல்லுங்கள் என்றாள். கற்பகத்தின் அக்கா வைதேகிக்கு 45  வயது. கணவன் இறந்து ஆறுமாதமாகிறது. எட்டாவதோடு பள்ளிக்கு முற்றுப்புள்ளி வைத்து வரன் தேட, மூல நட்சத்திரப் பெண்ணா... பெண் மூலம் நிர்மூலம் என்று அவள் காதுபடவே  பேசி நிராகரித்தனர். 30 வயதுக்கு மேல்தான்  அவளைக் கட்டிக் கொடு்த்தனர். விதி நல்ல புருசனையும் கொடுக்கலை. வாழவும் விடலை! என்ற நினைப்பு ஓடிய போது...

" அம்மா ஆ ஆ ஆ..".. என்றபடி மாலா வாசல்படியேறி வந்து கொண்டிருந்தாள்.

" டிரஸ்ஸை மாத்திட்டு கைகால் அலம்பிட்டு வா."

" சரி சரி.. மெதுவா சொல்லு. கத்தாதே... பாப்பாவுக்கு காது வலிக்கும்ல..."

" எ.... எந்தப் பாப்பாவுக்கு....? 

" இந்த பாப்பாவுக்குத்தான்"  என்று தன்னை சுட்டிக்காட்டிப் பேச... இவளிடம் எப்படிச் சொல்ல என்ற தயக்கம் மேலும் கூடியது."

 

இரவானதும்  கணவனுக்கு செய்தி அனுப்பினாள். 

 

கங்காதரன் உடனே மனைவியை போனில் அழைத்தான். ஒரு வாரத்தில் வருவதாகவும், தானே மகளிடம் பக்குவமாக எடுத்துச் சொல்வதாகவும், கவலைப்பட வேண்டாம் என்றும், பிறப்பது ஆணாக இருக்கும்பட்சத்தில் அனைவரும் மகிழவே செய்வார்கள் என்றும் சொல்லி சமாதானப்படுத்தினான்.

 

அப்பாவின் திடீர் வருகை மாலாவிற்கு வியப்பாக இருந்தது. ஒவ்வொரு முறையும் தனக்கு என்ன தேவை என்று  கேட்டு வாங்கி வரும் பழக்கமுள்ளவர், இம்முறை  ஒன்றையும் கையில் கொண்டு வராதது வேறு மனசை பிராண்டியது. ஆனால் அமைதியாக இருந்தாள். வந்து இரண்டு நாட்களாகியும்  எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த கணவனிடம்  பேசும்படி கண் ஜாடைக் காட்டினாள் கற்பகம்....

 

"மாலா.... நல்லா படிக்கிறியா டா.... அப்பா வேறு ஊரில் இருப்பதால் உன்னை கவனிக்க முடியலை."

" நான் என்ன குழந்தையாப்பா... +2 படிக்கிறேன்."

"அதெல்லாம் சரிடா. நம்ம வீட்டுக்கு ஒரு குட்டி பாப்பா வந்தால் என்ன செய்வே..".?

 

ஐந்து நிமிடம் அமைதியாக இருந்து விட்டு அப்பாவையும் அம்மாவையும் மாறி மாறி பார்த்தாள். " எனக்குத் தெரியும்!"  என்று தலையைக் குனிந்து கொண்டாள். குரல் மென்மையாக ஒலித்தது.

" யார் சொன்னா.."..?

" தாத்தா கனவில் வந்து சொன்னார்."

" எந்த தாத்தா...?!

" உங்கப்பாதான் பா"

" என்னடி சொல்றா இவள்...? கங்காதரன் திகைப்புடன் மனைவியைக் கேட்க...

"உங்கள் பொண்ணு பழையபடி ஆரம்பிச்சுட்டா.  முன்பெல்லாம் பேய் பார்த்தேன், பிசாசு பார்த்தேனு சொல்லுவா. இப்ப வேற மாதிரி கதை சொல்றா... உங்கப்பா நம்ம கல்யாணம் முடிந்த இரண்டே நாளில் போய் சேர்ந்துட்டாரு. இவள் பார்த்ததே  இல்லை. என்ன பேச்சு பேசுறா பாருங்க” என்று சொன்னதும்...

 

கோபத்தில் மூக்கு விடைக்க உள்ளே எழுந்து போன மாலா ஒரு பேப்பர் பேனாவுடன் வந்தாள். பத்தே நிமிடத்தில் தன் மாமனார் துரைராஜின் முகத்தை பேப்பரில் பதிக்க,  கற்பகம் அசந்து போனாள். கங்காதரன் அதிர்ந்தான். அவனுக்கு ஏசியிலும் வியர்த்து வழிந்தது.

" வேறென்ன சொன்னார்..?” என்று கேட்ட கற்பகத்திடம், 

"எதுக்கு சொல்லனும்... நீதான் நம்பலையே.. நீ யாரையும் வரச் சொல்லாதே. உனக்குத் துணைக்கு நானிருக்கேன்..."

" ஆமா நீ பெரிய மனுசி பாரு.... போய் படி போ"  என்று விரட்ட,...அம்மாவை முறைத்து விட்டுப் போனாள் மாலா.

அதில் ஒருவித உக்கிரம் தெரிந்தது.

 

( திகில் தொடரும்...)

 

-இளமதி பத்மா