எந்தச் சொல்லாயினும் அச்சொல்லானது ஏதேனும் ஒரு பொருளைக் குறித்தே தோன்றுகிறது. சொல் என்பது பொருளுணர்த்துவது. பொருளுணர்த்தாத எவ்வொன்றும் சொல்லாகாது. இதனை இத்தொடரின் தொடக்கத்திலேயே கூறியிருக்கிறேன். ஒரு சொல்லுக்கு ஒரு பொருளுண்டு என்பது திண்ணம். அச்சொல் ஒற்றைப்பொருளோடு நின்றுவிடுவதுமில்லை. தொடர்ந்து வெவ்வேறிடங்களில் பொருளுணர்த்தும் உயிர்ப்போடு விளங்குகிறது.
ஒரு சொல்லுக்கு ஒரேயொரு பொருள் மட்டுமே உள்ளதா ? அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்கள் வழங்கப்படுமா ? ஒரு சொல்லுக்கு ஒரு பொருளேனும் உண்டு. அதற்கு மேலும் பல பொருள்கள் வழங்கப்படுவதும் உண்டு.
ஒரு சொல்லானது ஓரிடத்தில் தோன்றி அவ்வோரிடத்திலேயே வழங்கப்படுவதைல்லையே. எவ்வொரு சொல்லும் தான் தோன்றிய இடத்திலிருந்து பரவி பன்னிலங்களில் வழங்கப்படுவது. அதன் தோற்றுவாயே கூட பற்குழுக்களிடையே வெவ்வேறு பொருள்களோடு தோன்றியதாய் இருக்கக்கூடும். இவ்வேறுபாட்டினை மக்களின் பேச்சுத் தமிழிலேயே நாம் உணரலாம்.
தமிழகத்தின் தென்புலத்தில் ‘ஆச்சி’ என்னும் சொல் பழுத்த மூதாட்டியைக் குறிக்கிறது. மேற்கு மாவட்டங்களில் அச்சொல் ‘ஆயிற்று’ என்ற வினைப்பொருளின் கொச்சையாக வழங்கப்படுகிறது. நெல்லையில் “என்ன ஆச்சி ?” என்றால் “என்ன அம்மையே ?” என்பது பொருள். கோவையில் “என்ன ஆச்சி ?” என்றால் “என்ன ஆயிற்று?” என்பது பொருள். ஒரே சொல்தான். அதற்கு ஒவ்வோரிடத்திலும் ஒவ்வொரு மக்கள் திரளிடையேயும் ஒவ்வொரு பொருள் வழங்கப்படும் என்பது நாம் விளங்கிக்கொள்ளக் கூடியதே.
மொழியறிவும் புலமையும் மேம்படுகையில் ஒரு சொல்லுக்கு வழங்கப்பட்ட எல்லாப் பொருள்களும் தொகுக்கப்பட்டன. மொழிப்புலவர்களின் வேலையே இதுதான். எளியவர்களுக்கு ஒரு சொல்லின் ஒரு பொருள்தான் தெரிந்திருக்கும். மொழியின் ஆழங்கால் பட்டவர்க்கே ஒரு சொல்லுக்கு வழங்கப்படும் பற்பல பொருள்களும் தெரிந்திருக்கும்.
ஊசி என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். ஊசி என்ற சொல்லைக் கேள்வியுற்றவுடன் நமக்குத் தோன்றும் பொருள் என்ன? துணிப்பிரிவுகளை நூல்கொண்டு தைத்து இணைக்கும் கூர்மையானதும் மெலிதானதுமான குத்து பொருள். ஊசி என்ற சொல்லுக்கு வழங்கப்படும் இப்பொருளை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். ஊசி என்பதற்கு அஃதொன்றே பொருளா ?
அக்காலத்தில் ஊசியின் முதன்மைப் பணிகளில் ஒன்று ஓலைச்சுவடிகளில் எழுதுவது. எழுத்தாணியை ஊசி என்று வழங்கியிருக்கின்றனர். காலில் முள் தைத்தால் அதனைக் கிழித்து அகற்றுவதற்கும் ஊசி பயன்பட்டிருக்கிறது. கிழிபட்ட துணியைத் தைப்பதற்குப் பயன்பட்ட அதே ஊசிதான் முள்ளேறிய கால் பகுதியின் மேல் தோலைக் கிழிப்பதற்கும் பயன்பட்டிருக்கிறது. இப்படி அப்பொருளின் பயன்பாடு அதன் தோற்ற நோக்கத்தைத் தாண்டி விரிவடைகிறது. தராசு எனப்படும் எடைக்கோலின் நடுமுள் நேராக நிற்றல் வேண்டும். அம்முள்ளையும் ஊசி என்றே வழங்கியிருக்கின்றனர்.
ஊசி என்பது சின்னஞ்சிறு பொருள் ஆயிற்றே. சின்னஞ்சிறு பொருளாயினும் அதன் செயலில் வன்மையுடையது. அத்தன்மையைக் கொண்டு அத்தன்மையுடைய வேறு பொருள்கள் சிலவற்றுக்கும் ஊசி என்ற முன்னொட்டைச் சேர்த்துக்கொண்டனர். எடுத்துக்காட்டாக, வயிற்றைக் குடையும் புழுவுக்கு ‘ஊசிப்புழு’ என்று பெயர். செடிகொடிகளில் சின்னஞ்சிறிதாய்க் காணப்படும் சல்லிவேர்கள்தாம் பாறையை முதலில் துளைத்துச் செல்பவை. அதனால் அவற்றை ஊசிவேர்கள் என்றார்கள். மல்லிகையில்கூட ஊசிபோல் மெலிதாயும் நீண்டுமுள்ளது ஊசிமல்லிகை எனப்பட்டது.
வடதிசைக்கும் ஊசி என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கிறது. வடதிசைக்கு அச்சொல் எப்படி ஏற்பட்டிருக்கக்கூடும் என்று எண்ணிப் பாருங்கள். காந்த ஊசி எப்போதும் வடதிசையைக் காட்டி நிற்கும். “ஊசி காட்டும் திசை வடக்கு” என்பதன் சுருக்கமாக அத்திசையைக் காட்டும் பொருளைக் கொண்டே திசைக்கும் பெயர் வைத்துவிட்டனர். ஒரு சொல் இப்படித்தான் அதன் வடிவத்தை, வன்மையை, தன்மையை, ஒன்றோடொன்று தொடர்புடைய இயல்பினைக்கொண்டு அடுத்தடுத்த பொருளழகினை ஏற்றுக்கொள்கிறது. “ஒரு சொல்லுக்கு இத்தனை பொருள்களா? இவற்றையெல்லாம் யார் நினைவிற்கொள்ள முடியும் ?” என்று நாம் தேவையின்றி அஞ்சுகிறோம். ஆனால், அப்பொருளின் ஏதோ ஓர் ஒற்றுமை அடுத்தடுத்த பொருளாட்சியை ஏற்று நகர்கிறது. இச்செயல் பன்னெடுங்காலமாக நடந்தது. இன்றைக்கு அவற்றைத் தொகுத்துப் பார்க்கும்போது நமக்கு வியப்பூட்டுகிறது.
சிறிய கருவிதான். அதற்கு வழங்கப்படும் ஒற்றைப் பொருள், அதன் ஒவ்வோர் இயற்கையைக்கொண்டு ஒவ்வோரிடமாக நகர்ந்து செல்கிறது. ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் தோன்றுவது இப்படித்தான்.
முந்தைய பகுதி:
“இதற்குப் பெண்பால் என்ன ?’ கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 23
அடுத்த பகுதி: