Skip to main content

உபத்திராவுக்குக் கொடுத்த வாக்கு... ஆட்டோ சங்கர் #18

Published on 15/09/2018 | Edited on 30/09/2018
auto sankar 18



ஒரு புறம் பாபுவின் முகத்தைப் பதற்றம் தொற்றிக்கொண்டது. இன்னொரு புறம் மூலவியாதி வந்தவன் போல் இருப்புக் கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.
 
"சுடலை இன்னும் ஏன் போன் செய்யவில்லை”, அங்கிருந்தும் தப்பித்துவிட்டானா, என்ன? தன் மீது சுடலைக்குக் கோபம்   ஏற்பட்டிருக்குமா என்ன? என்ன, என்ன, என்ன என்று நெஞ்சம் நெடுக கேள்விகள் பிறந்துகொண்டே இருந்தது.

ஒரு தீர்மானத்துக்கு வந்தவனாக பைக்கை உசுப்பி, உபத்திராவை தேடிக்கொண்டு போனேன். உபத்திரா வீட்டில் இன்னமும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. முதல் தட்டிலேயே கதவு கொட்டாவி விட்டது. உபத்திரா வெளிப்பட்டாள்.


"சுடலை இன்னும் வரலையா” என்று கேட்க நினைத்து, "இ... இன்னும் தூங்கலை?'' என்றேன். ம்ஹும்... கூடாது. இப்போது போய்   அப்படிக் கேட்டால் இவள் கலவரம் அதிகமாயிடும். அரண்டு விடுவாள்.

"எப்படிண்ணே தூக்கம் வரும். அ... ஆமா அவர் எங்கே?''

சிரமப்பட்டுச் சிரித்தேன்.

"வந்துடுவான், நீ சாப்பிட்டாச்சா?''

"சாப்பாடு, தூக்கம் எல்லாம் அவரைப் பார்த்தப்புறம்தாண்ணே... அடிச்சு முடிச்சிட்டீங்களா? இன்னும் முடியலையா?'' -அவளுக்குக் கண்ணீர் ததும்பினது.

"கவலைப்படாதே! சுடலையைக் கூட்டிக்கிட்டு  திரும்பி வரேன்... நீ போய் படுத்துக்க! அவனுக்கு எதுவும் ஆகாது. நான் பொறுப்பு!   போதுமா? போய் நிம்மதியா தூங்கு! காலையிலே ஆறுமணிக்குச் சுடலையைக் கூட்டிட்டு வந்து உன் முன்னாலே நிப்பேன்.''

புருபுருவென சீறிக்கொண்டு பறந்தது பைக். கவலை ஆக்ஸாப்ளேடாக சன்னம் சன்னமாக மனதை அரித்தது.

வீட்டு வாசலில் திடும்மென்று பாபுவைப் பார்த்ததும் பரவசப்பட்டேன். கூடவே மெலிந்த நூலான கோபமும் கிளம்பிற்று.

"போனதும் போன் பண்ணச் சொன்னேனில்லே... பண்ண வேணாமா? இப்ப உங்களைப் பார்க்கத்தான் நான் கிளம்பிக்கிட்டிருக்கேன். "ஆள் அகப்பட்டானில்ல?'', "இப்ப சுடலை எங்கே இருக்கான்?'' என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே இருந்தேன்.

பாபு எச்சிலையும் உண்மையையும் ஒரே சமயம் விழுங்கினான்.
 

 

ad



"நம்ம குடோன்லே கிடக்குதுண்ணே!''

"அப்படியா...?'' -மலர முயன்ற புன்னகை, ஜனனத்திலேயே செத்தது.

"கி... கிடக்கிறானா? கிடக்குதா? எ...ன்...ன... சொ...ல்...றே... பாபு?'' என்றேன் நடுக்க வார்த்தையில்.

"அ... ஆமா... சங்கரண்ணே! அவன் சாகப்போறான்னு எதிர்பார்க்கவே இல்லை, நான்...'' -பாபு பேசிக்கொண்டே போக என் முதுகில் தண்டுவடத்தில் ஓர் ஐஸ் கட்டி ஸ்லோமோஷனில் வழுக்கினது.


குவாட்டர் அடித்துக் குப்புறப்படுத்திருந்தவன் தலையில் குதுப்மினார் விழுந்த அதிர்ச்சி. நெற்றிக்கு முன்னால் நினைவுகளில்   உபத்திராதேவி ஒரு நிமிடம் தொழுத கைகளுடன் தோன்றி "அ...வ...ரை... அடிச்சு முடிச்சுட்டீங்களா... இன்னும் முடியலையா   அண்ணே?” என்றாள்.

"கடவுளே... கடவுளே...'' முகத்திலே அறைந்துகொண்டு அரற்றினேன்.

வெளிச்சம் வேண்டும் என்பதற்காகக் கூரையைக் கொளுத்தின காரியம் செய்துவிட்டான் பாபு. இது ஒருவித எஜமான விசுவாசத்தின் வெளிப்பாடு. தவிர சாகப்போவதை அவனும் எதிர்பார்க்கவில்லை என்கிறானே? இப்போது உபத்திராவுக்கு என்ன பதில் சொல்லப்போகிறேன். முட்டை மீது இடி விழுந்த மாதிரி ஆகிவிட்டதே!

 

 

burning 1



"அண்ணே... பாடி குடோன்ல கிடக்குது. காலைல யாவாரத்துக்கு ஆட்களெல்லாம்... வந்துடுவாங்க! அதுக்குள்ள டிஸ்போஸ்    பண்ணணும்...'' என்று இழுத்தான் மோகன்.

பாபு குற்ற உணர்ச்சியுடன் பூமி பார்த்தான். எனக்குள் பரபரவென ஒரு மின்சாரம் பரவியது. சுடலையின் சாவில் எனக்கு விருப்பம்   உண்டோ, இல்லையோ சம்பந்தம் உண்டு. அவன் அதற்குக் காரணமில்லை என்றாலும் சகலரும் இதில் குற்றவாளிதான். பாபு கூட   எனக்காகத்தான் கொலையே பண்ணியிருக்கிறான். அதனால் பிணத்தை அப்புறப்படுத்துவதில் விரைவு காட்டத்தான் வேண்டும்.   முன்பு லலிதாவை அவன் கொலை செய்தபோது கேள்வியே கேட்காமல் அவர்கள் உதவவில்லையா, அதுமாதிரி.

சுடலையைப் புதைக்க வேண்டாம் என்று தீர்மானமாயிற்று. தரையைத் தோண்டவும் சமாதி கட்டவும் நேரம் கிடையாது. ஈர மணல் பார்த்து காலையில் கேள்வி எழும்! சாராயப்பிரியர்கள் சந்தேகப்படுவார்கள். மண்ணெண்ணெய் வாங்கி, சுடலையைக்   குளிப்பாட்டினோம். தீக்குச்சி உரசி எறிய... சுடலை கூரை விட்டம்வரைக்கும் எரிந்தான். வெப்பம் தாங்காமல் அறையைப்   பூட்டிவிட்டு வெளியே வந்துவிட்டோம்.

சாம்பலை மூட்டை கட்டினோம். வண்டியில் ஏற்றி கடலுக்குச் சென்றோம். இடத்தை சுத்தப்படுத்தும் பொறுப்பை எல்டின்   ஏற்றுக்கொண்டான். முட்டுக்காடு கடற்கரையில் மூட்டையை இறக்கினோம். தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத   விக்கிரமாதித்தனாக கரைக்கு மீண்டும் மீண்டும் படையெடுத்தது அலைகள்.

சொல்லமுடியாத சங்கடம் பரவிற்று. சுடலையின் அஸ்தியை என் கைகளாலேயே கடலுக்குள் கரைத்தேன். மீண்டும் உபத்திரா    நினைவுகளில் தோன்றினாள். உள்ளுக்குள் ஊமை ரணத்துடன் சாம்பலின் கடைசி பகுதியைக் கடலில் கரைத்துவிட்டு, பாபுவிடம் "மணி என்ன?” என்று கேட்டேன்.

"ஆறு மணி ஆகுதுண்ணே!'' என்றான் பாபு.

குறிப்பு: பயன்படுத்தப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சித்தரிப்புக்காகவே. தொடரின் மனிதர்களுக்கும்  புகைப்படங்களுக்கும் தொடர்பில்லை. 

 

அடுத்த பகுதி:

"ரெண்டு லட்ச ரூபாய் கொடுங்க, எதையும் வெளிய சொல்லமாட்டேன்!" - மிரட்டிய துரோகி! ஆட்டோ சங்கர் #19

முந்தைய பகுதி:

துரோகிக்கு என் தண்டனை என்ன தெரியுமா? ஆட்டோ சங்கர் #17

சார்ந்த செய்திகள்