குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் பகிர்ந்த ஒரு வழக்கைப் பற்றி பார்ப்போம்.
பூர்ணா என்ற பெண்ணுடைய வழக்கு இது. மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த இந்த பெண்ணின் குடும்பத்தில் மொத்தம் நான்கு பெண்கள். அதில் பூர்ணா மூத்தவள். அதனால் பூர்ணாவுக்கு திருமண வரன் தேடி ஒரு பையனைப் பார்த்துள்ளனர். அந்த பையனுக்கு பூர்ணாவை பார்த்ததும் பிடித்து விடுகிறது. அந்தளவிற்கு பூர்ணா அழகாக இருந்தாள். அதன் பின்பு பேசி பூர்ணாவுக்கு 15 பவுன் நகை மற்றும் மாப்பிள்ளைக்கு மோதிரம் என தங்களால் முடிந்ததை செய்து பூர்ணாவின் பெற்றோர் திருமணம் செய்து வைக்கின்றனர். ஆனால் திருமணமாகி பூர்ணா மாமனார் வீட்டிற்கு சென்று பல கொடுமைகளை அனுபவித்தார். முரட்டுத்தனமாக பூர்ணாவின் கணவர் நடந்திருக்கிறார். பூர்ணாவை பார்த்து உனக்கு என்ன பெரிய அழகி என்ற நெனப்பா? போனால் போகட்டும் என்றுதான் திருமணம் செய்துகொண்டேன் என்று கேட்டுள்ளார். திருப்பி பூர்ணா எதாவது பேசினால் ஓங்கி ஒரு அறை விட்டு பொம்பளைங்க அதிகமா பேசக் கூடாதுடி பேசினால் இப்படித்தான் அடி விழும் என்று கொடுமை செய்யத் தொடங்கியிருக்கிறார்.
பூர்ணாவின் மாமனார், மாமியார் இருவரும் வயதானவர்கள். அதில் மாமனார் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். அவர்கள் தன் மகனிடம் எதுக்குப்பா வீட்டுக்கு வந்த பெண்ணை இப்படி அடித்து கொடுமைப்படுத்துகிறாய் என்று கேட்டால்? அவர்களையும் அடிக்க பூர்ணாவின் கணவர் கை ஓங்கினார் . மாமனார், மாமியாருக்கு பூர்ணாவைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இருந்தது. ஆனால், தேவை இல்லாததுக்கு பூர்ணாவை அவளின் கணவர் அசிங்கம் அசிங்கமாக பேசியுள்ளார். இதுபோல அடிக்கடி நடக்கும்போது, பூர்ணா கோபப்பட்டு கணவருடன் எப்படி வாழ்வது என்று மாமியாரிடம் கேட்டுள்ளார். அதற்கு மாமியார், அவன் அப்படித்தான் கெட்ட பையன் இல்லை கொஞ்சம் அனுசரித்து போ என்று சமாதானப்படுத்தியிருக்கிறார்.
ஒரு பக்கம் தனது தங்கச்சிகளுக்குத் திருமணம் ஆகாததால் தான் வீட்டிற்குப் போய் தொந்தரவு செய்யக்கூடாது என்று கணவரின் செயல்களைப் பொறுத்துக்கொண்டு பூர்ணா வாழ ஆரம்பித்தாள். இதற்கிடையில் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த மாமியார் மாரடைப்பு வந்து இறந்து விடுகிறார். அதன் பின்பு பூர்ணாவின் கணவருக்கு வெளியூரில் வேலை கிடைத்து விடுகிறது. அதனால் பூர்ணா, தன் கணவரின் தொல்லை இருக்காது என சந்தோஷப்பட்டு, மாமனாரை பார்த்துக்கொண்டு நிம்மதியாக இருக்க முடிவெடுத்தாள்.
அந்த நிம்மதியை கெடுக்கும்படி பூர்ணாவின் கணவர் அடிக்கடி கால் செய்து டார்ச்சர் செய்துள்ளார். உதாரணத்திற்கு பூர்ணா கடைக்குச் சென்றால் எவன் கூட இருக்க? என்று சந்தேகப் பார்வையில் பார்க்க கேள்வி கேட்பார். பின்பு மாமனாருக்கு உடல்நிலை மோசமாகியுள்ளது. ஒருவேளை மாமனார் இறந்துவிட்டால் தன் மேல் எந்தவித பலிச் சொல்லும் வந்துவிடக் கூடாது என்பதற்காக கணவருக்கு கால் செய்து பூர்ணா விவரத்தைச் சொல்கிறாள். தனது அப்பா எப்போது இறப்பார்? என்ற மனநிலையுடன் பூர்ணாவின் கணவர் வீடு திரும்பினார். மோசமான உடல்நிலையுடன் இரண்டு வாரங்கள் பூர்ணாவின் மாமனார் உடல் இருந்துள்ளது. இதைப் பார்த்த அவளின் கணவர், ஏன் இன்னும் இழுத்துக்கொண்டு இருக்கிறார். சீக்கிரம் சாக மாட்டாரா? என கோபப்பட்டு அடிக்க முயன்றுள்ளார்.
எதுவும் பேச முடியாமல் மாமனார் அழுதுகொண்டு பூர்ணாவிடம் சாப்பாடு வாங்கி சாப்பிட்டு இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் பூர்ணாவின் கணவர், தனது அப்பாவை அடித்து கொடுமைப் படுத்திய பிறகு தான் அவர் இறந்துள்ளார். இதை வெளியில்கூட சொல்ல முடியாமல் மன கஷ்டத்துடன் தன் கணவருடன் பூர்ணா வாழ்ந்து வந்தாள்.
அதன் பிறகு ஒரு நாள் பூர்ணாவின் அம்மா, அவளைப் பார்க்க வந்துள்ளார். அப்போது நடந்த கொடுமைகளை பூர்ணா அம்மாவிடம் சொல்ல, அதற்கு அமைதியாக அவருடன் ஒன்றாக இரு என்று அம்மா சொல்லியிருக்கிறார். இதனிடையே நீண்ட நாட்களாக வேலைக்குப் போகாமல் இருந்ததால் பூர்ணாவின் கணவருக்கு வேலை போய்விடுகிறது. தனியாக கணவரிடம் இருந்த பூர்ணா, நிறையக் கொடுமைகளை அனுபவித்தாள். ஒரு நாள் பூர்ணா, காதில் பஞ்சை வைத்துக்கொண்டு கணவர் திட்டுவதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தன்னுடைய வேலையைப் பார்த்திருக்கிறாள். இது கணவருக்கு தெரிய மனைவியின் கன்னத்தில் ஓங்கி அடித்துள்ளார். அடித்த அடியில் பூர்ணாவின் காது சவ்வு அடைத்துவிடுகிறது. வெளியில் சொல்ல முடியாமல் சகித்துக்கொண்டு பூர்ணா இருந்துள்ளார். ஆனால் அவளின் கணவர், மனைவியைப் பற்றி அருகில் இருப்பவர்களிடம் தவறாகப் பேசியுள்ளார். அவர்களுக்கு பூர்ணாவைப் பற்றி தெரிந்ததால், மனைவியை சந்தேகப்படக்கூடாது என்று அவருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளனர்.
பூர்ணா தன் கணவரிடமிருந்து நிம்மதி வேண்டுமென்று அருகில் இருக்கும் ஒரு அனாதை இல்லத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் அவளின் கணவர், அந்த அனாதை இல்லத்திலுள்ள மேலாளரிடம் பூர்ணா தவறாக நடந்துகொள்வதாகப் பேசியிருக்கிறார். அப்படிப் பேசியதோடு மட்டுமில்லாமல் அந்த அனாதை இல்லம் முன்பு குடித்துவிட்டு பிரச்சனை செய்துள்ளார். இதை அங்குள்ள மேலாளர் கண்டித்து காவல்துறையில் புகார் கொட்டுத்துவிடுவேன் என்று சொல்லி மிரட்டி அவரை துரத்திவிட்டுள்ளார். அதன் பிறகு தொடர்ந்து பூர்ணாவின் கணவர் அவளை ஒழுக்கம் தவறியவள், மோசமானவள் எனப் பேசி துன்புறுத்தியுள்ளார்.
பொறுமை இழந்த பூர்ணா தான் அம்மா வீட்டிற்கு கிளம்பிவிடுகிறார். பின்பு வீட்டிற்குச் சென்ற பூர்ணா அங்குள்ள ஒரு கம்பெனியில் வேலைக்குச் சென்றுள்ளார். இதனை அறிந்த பூர்ணாவின் கணவர், குடித்துவிட்டு மாமியார் வீட்டு முன்பு பிரச்சனை செய்துள்ளார். அதன் பின்பு பூர்ணா தன் கணவர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் பூர்ணாவின் கணவரை கண்டித்துள்ளனர். ஆனால் அவர் மீண்டும் பூர்ணா வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று பிரச்சனை செய்துள்ளார். அந்த நிறுவனத்திடமிருந்து தன் கணவர் பேசி பிரச்சனை செய்ததை கடிதமாக பூர்ணா பெற்றுக்கொண்டார்.
அவள் அந்த கடிதத்தை வைத்து வன்முறை சட்ட அதிகாரிகளிடம் கணவர் மீது புகார் கொடுத்தார். அதன் பிறகு அவளின் கணவர், ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்து, தன் மனைவி உடலுறவு செய்து சம்பாதித்து வருகிறாள் என்று சொல்ல வைக்க பல நபர்களிடம் தன் மனையின் மொபைல் எண்ணைக் கொடுத்து பேச வைத்துள்ளார். அந்த நபர்கள் அடிக்கடி பூர்ணாவுக்கு கால் செய்து உடலுறவு வைத்துக்கொள்ளுமாறு விலை பேசியிருக்கின்றனர். இந்த சூழலில் பூர்ணா என்னை வந்து சந்தித்து நடந்ததைச் சொன்னாள். அவள் சொன்னதை வைத்து விவாகரத்து வழக்கு தொடர்ந்தோம். அதன் பின்பு நோட்டீஸை பூர்ணாவின் கணவருக்கு அனுப்பினோம். அதை அவர் பெற்றுக்கொள்ளாமல் 6 மாதங்கள் கடத்தினார். பின்பு நீதிபதியிடம் பூர்ணாவின் கணவர் நீதிமன்றம் வர மறுக்கிறார் என்றதும் எக்ஸ் பார்ட்டி அடிப்படையில் பூர்ணாவுக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தனர். இவ்வாறாக பூர்ணாவின் வழக்கு முடிந்தது என்றார்.