தென்கொரியாவில் அமெரிக்கா ராணுவம் நடத்திய அட்டூழியங்களுக்கு பின்னணியில் சீனாவின் உள்நாட்டுப்போர் காரணமாக இருந்தது.
சீனாவில் மன்னராட்சியை முடக்கிய பிறகு பல தேசிய அரசுகள் அமைந்தன. சன் யாட் சென் சோவியத் உதவியை கேட்டார். சன் யாட் சென்னுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இணைத்தே சோவியத் ஆதரவு கிடைத்தது. சன் யாட் சென்னுக்கு அடுத்த இடத்தில் இருந்த சியாங்கே ஷேக்கின் கை ஓங்கியது. அவர் மாவோ தலைமையிலான கம்யூனிஸ்ட்டுகள் சன் யாட் சென்னின் மூன்று கோட்பாடுகளை ஏற்கமறுப்பதாக குற்றம்சாட்டினார். சோவியத்தின் ஆணைப்படியே கம்யூனிஸ்ட்டுகள் செயல்படுவதாக குறைகூறினார். இதையடுத்து சன்யாட்சென்னின் குவாமிங்டாங் கட்சிக்கும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே பிளவு ஏற்பட்டது. இதையடுத்து குவாமிங்டாங் கட்சியிலிருந்த கம்யூனிஸ்ட்டுகள் வெளியேற்றப்பட்டனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். கம்யூனிஸ்ட் புரட்சி ஏற்படுவதற்கு முன், தேசியவாத புரட்சியை சியாங்கே ஷேக் முன்னெடுத்தார். இதையடுத்து தேசியவாத புரட்சிகர ராணுவத்துக்கு போட்டியாக செஞ்சேனை உருவாக்கப்பட்டது. சீனாவின் பல பகுதிகளை இரண்டு ராணுவமும் படிப்படியாக தங்கள் ஆளுகைக்கு உட்படுத்தி வந்தன. 1928 ஆம் ஆண்டு கிழக்கு சீனாவில் முன்னேறி, பெய்ஜிங்கை கைப்பற்றி அரசாங்கம் அமைக்கப்பட்டது. அந்த அரசுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது.
சீன மக்கள் குடியரசை அறிவிக்கும் மாவோ
அதேசமயம் மாவோ, சூ என் லாய், டெங் ஸியோ பிங் ஆகியோர் தலைமையில் சீனாவின் பல பகுதிகளில் இருந்து செஞ்சேனையின் நெடிய பயணம் தொடங்கியது. செஞ்சேனைக்கும் தேசியவாத ராணுவத்துக்கும் பல பகுதிகளில் சண்டை நடந்தது. பல இடங்களில் மக்கள் படையை எதிர்க்க முடியாமல் தேசியவாத ராணுவம் செஞ்சேனையுடன் இணைந்தன.
சீனாவின் பல பகுதிகள் கம்யூனிஸ்ட்டுகளின் கையில் வந்த நிலையில், சீனா மீது ஜப்பான் இரண்டாவது யுத்தத்தை தொடங்கியது. நவீன ஆயுதங்களுடன் கூடிய ஜப்பான் ராணுவம் தேசியவாத அரசின் ராணுவத்தின் எதிர்ப்பை வடக்கு மற்றும் கடலோர சீனாவின் பகுதிகளில் தோற்கடித்து முன்னேறியது. அந்த ஆபத்தான நிலையிலும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும், தேசியவாத அரசு ராணுவமும் மோதல் போக்கைத் தொடர்ந்து கொண்டிருந்தன. இதையடுத்து, கம்யூனிஸ்ட் கடிசியை சோவியத் யூனியனும், சியாங்கே ஷேக்கை அமெரிக்காவும் சமரசம் செய்தன. அதைத்தொடர்ந்து, சீனாவைத் தாக்கிய பொது எதிரியை வீழ்த்த சீன கம்யூனிஸ்ட் கட்சியும், தேசியவாத ராணுவமும் இணைந்த தாக்குதலை தொடுத்தன.
இரண்டாம் உலகப்போர் முடிந்த சமயத்தில் செஞ்சேனையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 13 லட்சம் ஆகியது. அதுபோக, கொரில்லா போராளிகள் எண்ணிக்கை 26 லட்சமாக உயர்ந்தது. சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மொத்தம் 10 கோடிப்பேர் வாழ்ந்தனர்.
இந்நிலையில்தான் ஜப்பான் சரணடைந்தது. சீனாவில் சோவியத் ராணுவமோ, அமெரிக்க ராணுவமோ இல்லை. எனவே, சீனாவில் சரணடையும் ஜப்பான் ராணுவத்தினர், சீன கம்யூனிஸ்ட் கட்சியிடமோ, தேசியவாத அரசின் ராணுவத்திடமோ சரணடையலாம் என்று சோவியத் யூனியனும் அமெரிக்காவும் கூறிவிட்டன.
மஞ்சூரியாவைத் தாக்கிய 20 லட்சம் ஜப்பானிய வீரர்களுடன் சோவியத் யூனியன் போரிட்டு, மஞ்சூரியாவை முழுமையாக சோவியத் ராணுவம் கைப்பற்றியது. அங்கு மட்டும் 7 லட்சம் ஜப்பான் ராணுவத்தினர் சரணடைந்தனர். தனது ராணுவம் வரும்வரை மஞ்சூரியாவை சீன கம்யூனிஸ்ட்டுகளிடம் கொடுக்கக் கூடாது என்று சியாங்கே ஷேக் கூறினார். ஆனால், சோவியத் ராணுவம் சீன கம்யூனிஸ்ட்டுகளிடம் மன்சூரியாவை ஒப்படைத்தது. இதையடுத்து, மன்சூரியாவிலிருந்த தேசியவாத அரசின் ராணுவத்தை அமெரிக்க ராணுவ விமானங்கள் ஏற்றிச் சென்று சீனாவின் வடக்குப் பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்களை ஆக்கிரமிக்க வசதியாக இறக்கிவிட்டன. சீனாவின் கிராமப்பகுதிகள் முழுமையாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிடியில் இருந்ததால், சியாங்கே ஷேக்கை தனது ஆதரவாளராக உருவாக்க அமெரிக்கா ராணுவம் திட்டமிட்டு செயல்பட்டது.
அதாவது சீனா முழுமையாக கம்யூனிஸ்ட்டுகளின் பிடியில் போய்விடக்கூடாது என்று அமெரிக்கா நினைத்தது. இதே நினைப்பில்தான் கொரியாவைப் பிரிக்கவும் அமெரிக்கா திட்டமிட்டு செயல்பட்டது. ஆனால், சீனாவில் சியாங்கே ஷேக் அரசின் ராணுவத்துக்கு எதிராக சீனாவின் செஞ்சேனை தீவிரமாக போரிட்டது.
இந்தச் சண்டை 1946ல் தொடங்கி 1949 வரை நீடித்தது. அதற்குள் வடகொரியாவில் கம்யூனிஸ்ட் அரசாங்கம் நிறுவப்பட்டுவிட்டது. அங்கிருந்து கொரிய கம்யூனிஸ்ட் கொரில்லா போராளிகள் 70 ஆயிரம் பேர் சீன கம்யூனிஸ்ட்டின் செஞ்சேனையில் இணைந்து போரிட்டனர். சீனாவில் குடியேறிய ஆயிரக்கணக்கான கொரியர்களும் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருந்தனர்.
1948 மற்றும் 1949 ஆம் ஆண்டுகளில் தென்கொரியாவை வடகொரியாவுடன் இணைக்கும் போராட்டத்தை முன்னெடுத்த கம்யூனிஸ்ட்டுகளுக்கு உதவியாக சீனா துணை நின்றது. சீனாவில் இருந்து சியாங்கே ஷேக் தைவான் தீவுக்கு தப்பி, அங்கு சீன குடியரசை நிறுவினார். சீனாவை முழுமையாக கைப்பற்றிய கம்யூனிஸ்ட்டுகள் அங்கு சீன மக்கள் குடியரசை நிறுவினார்கள்.
இதற்கிடையில்தான், கொரியா இரண்டாக பிரிக்கப்பட்டு, தென்கொரியாவில் போலியான தேர்தல் நடத்தப்பட்டது. அமெரிக்கா ஆதரவாளரான சிங்மேன் ரீ ஜனாதிபதியாக பொறுப்பேற்றாலும், அவருக்கு எதிரான மக்கள் போராட்டத்தை அடக்க முடியவில்லை. தென்கொரியா முழுவதும் அவருக்கு எதிராக கொந்தளித்துக் கொண்டிருந்தது.
தென்கொரியாவில் தனக்கெதிராக லட்சக்கணக்கான கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் இருப்பதாக சிங்மேன் ரீ நினைத்தார். அவர்களைப் பற்றிய பட்டியலைத் தயாரிக்கும்படி உத்தரவிட்டார். கம்யூனிஸ்ட்டுகளும், அவர்களுடைய ஆதரவாளர்களும்தான் தனது அரசியல் எதிரிகள் என்று ரீ முடிவு செய்தார்.
ஜப்பானியர்களோடு இணைந்து செயல்பட்ட கொரியா நீதிபதிகள் போடோ லீக் இயக்கத்தை தொடங்கினார்கள். இந்த இயக்கத்தினர் தயாரித்த பட்டியலில் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் அல்லாதவர்களும், விவசாயிகளும் கட்டாயப்படுத்தி இணைக்கப்பட்டனர். இந்த போடோ லீக் இயக்கத்தில் விடுதலைப் போராட்ட ஆதரவாளர்கள் இருப்பதாக தென்கொரியா அரசு 1949 ஆம் ஆண்டு ஜூன் மாதம் குற்றம்சாட்டியது.
தென்கொரியாவில் தனது அரசுக்கு எதிரானவர்களை ஒழித்துக் கட்டும் நடவடிக்கையில் அவர் தீவிரமாக இருந்தார். அதேசமயத்தில் இரண்டு கொரியாக்களையும் பிரிக்கும் எல்லைப்புறத்தில் வடகொரியா ராணுவம், அமெரிக்கா தலைமையிலான தென்கொரியா ராணுவத்துடன் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டுவந்தது.
ஒரு கட்டத்தில் சிங்மேன் ரீயின் அடக்குமுறை கட்டுக்கடங்காமல் போனது. அதையடுத்து, 1950 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி தென்கொரியா மீது வடகொரியா ராணுவம் படையெடுத்தது. தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பின்வாங்கிய தென்கொரியா ராணுவமும், கம்யூனிஸ்ட் குழுக்களுக்கு எதிரானவர்களும், சிறைப்பட்டிருந்த கம்யூனிஸ்ட்டுகளை ஈவிரக்கமில்லாமல் கொன்றனர். விசாரணையோ, தண்டனையோ அறிவிக்கப்படாமல் அவர்கள் கொல்லப்பட்டனர்.
தென்கொரியாவின் பல பகுதிகளில் கம்யூனிஸ்ட் கொரில்லாக்களும், கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் என்று கருதப்பட்டோரும் கொல்லப்பட்டு ஒரே இடத்தில் மொத்தமாக புதைக்கப்பட்டனர். 1990களுக்குப் பிறகு இத்தகைய அத்துமீறல்கள் தொடர்பான புகைப்பட ஆதாரங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. இப்போதும் இந்த போர்க் குற்றங்கள் விசாரணையில் இருக்கின்றன.
2008 ஆம் ஆண்டு தென்கொரியாவில் உள்ள டாயேஜியோன் என்ற இடத்தில் ஏராளமான குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கொன்று புதைக்கப்பட்ட சவக்குழி கண்டுபிடிக்கப்பட்டது.
தென்கொரியா மீது போர் தொடங்கியபோது அந்த நாட்டின் வீரர்கள் எண்ணிக்கை 95 ஆயிரம் பேராக இருந்தது. ஐந்தே நாட்களில் அந்த எண்ணிக்கை 22 ஆயிரம் பேராக குறைந்தது. இதையடுத்து ஐ.நா. உத்தரவின் பேரில் என்று சொல்லி அமெரிக்கப் படை தென்கொரியாவுக்கு வந்தது.
அந்தச் சமயத்தில் ஐ.நா.சபையில் அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. வீட்டோ அதிகாரம் உள்ள சோவியத் யூனியன், ஏற்கெனவே தைவான் அரசாங்கத்தை சீன குடியரசாக ஐ.நா. அங்கீகரித்ததை எதிர்த்து கூட்டங்களை புறக்கணித்து வந்தது. இந்நிலையில்தான், தென்கொரியா மீது வடகொரியா போர் தொடுத்ததை ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் உறுப்பினராக உள்ள நாடுகள் தென்கொரியாவில் வடகொரியாவை எதிர்த்து போரிட ராணுவ உதவி செய்ய வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
அமெரிக்க ராணுவம் தென்கொரியாவுக்கு ஆதரவாக சண்டையில் ஈடுபட்டதை சோவியத் யூனியன் கடுமையாக கண்டித்தது. அதையும் மீறி ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பு நாடுகளின் படை அமெரிக்க ராணுவத்தின் தலைமையில் தென்கொரியாவுக்குள் புகுந்தது. வடகொரியா கைப்பற்றியிருந்த சியோல் நகரை மீட்டது. அதன்பிறகு தென்கொரியா இழந்திருந்த முக்கிய நகரங்களை மீட்டது. வடகொரியா ராணுவம் பின்வாங்கியது. வடகொரியாவை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் சீனாவும் சோவியத் யூனியனும் தள்ளப்பட்டன. ஆனால், சோவியத் யூனியன் இரண்டாம் உலகப்போரில் சந்தித்த இழப்புகளில் இருந்து இன்னமும் மீளமுடியாத நிலையில் இருப்பதாக மாவோவிடம் ஸ்டாலின் தெரிவித்தார்.
சீனாவுக்கு போர் தளவாடங்களை கடனாக அளிக்க முடியும் என்றும், விமானப்படை உதவி உடனடியாக கிடைக்காது என்றும் தெளிவுபடுத்தினார். இதையடுத்து, மாவோ மக்கள் தன்னார்வ படை என்ற பிரிவை உருவாக்கினார். இதற்குள் அமெரிக்கா தலைமையிலான படைகள் வடகொரியாவுக்குள் புகுந்தன. வடகொரியாவையும் சீனாவையும் பிரிக்கும் யாலு ஆற்றை நெருங்கினார்கள். இதை எதிர்பார்த்திருந்த சீன படைகள் யாலு ஆற்றைக் கடந்து அமெரிக்கா தலைமையிலான ராணுவத்தை துவம்சம் செய்தன.
உயிர்கொடைக்கு அஞ்சாத சீனா மற்றும் வடகொரியா மக்கள் ராணுவம் எதிரிகளை விரட்டியடித்தது. வெகு வேகமாக வடகொரியாவிலிருந்து விரட்டப்பட்ட அமெரிக்க ராணுவம் தென்கொரியாவுக்குள் நுழைந்தது. தென்கொரியாவும் கைப்பற்றப்பட்டுவிடும் என்ற நிலை உருவானவுடன், ஐ.நா.சபை சமாதானப் பேச்சுக்கு வந்தது.
ஆனால், இருநாடுகளும் தங்கள் நிலையில் உறுதியாக இருந்தார்கள். இருநாடுகள் இணைப்பில் வடகொரியா உறுதியாக இருந்தது. அமெரிக்காவின் ஊதுகுழலாக இருந்த தென்கொரியா ஜனாதிபதி வடகொரியாவுடன் இணைய விருப்பமில்லை என்றார்.
அதைத்தொடர்ந்து இரண்டு கொரியாக்களின் எல்லைக்கு இருபுறமும் அமைதிப்பிரதேசம் உருவாக்கப்பட்டது.
(இன்னும் வரும்)
முந்தைய பகுதி:
குட்டித் தீவுக்காக நடந்த கொடூரமான யுத்தம்! கொரியாவின் கதை #13
அடுத்த பகுதி:
போர் நிறுத்தத்திற்கு பின் தென்கொரியா அரசு!!! கொரியாவின் கதை #15