Skip to main content

தென்கொரியாவில் பதவி பறிக்கப்பட்ட முதல் பெண் ஜனாதிபதி!!! கொரியாவின் கதை #21

Published on 10/11/2018 | Edited on 17/11/2018
koreavin kathai


 

தென்கொரியா உருவானபிறகு பிறந்து ஜனாதிபதி ஆனவர் பார்க் ஜியன்-ஹியே. தென்கொரியாவின் 18 ஆவது ஜனாதிபதி. முதல் பெண் ஜனாதிபதி. கிழக்கு ஆசிய நாடுகளில் மக்கள் ஆதரவுடன் வெற்றிபெற்ற முதல் ஜனாதபதி என்ற பெருமைகளுக்கு சொந்தக்காரர்.

 

1961ல் ராணுவக் கலகம் மூலமாக தென்கொரியா ஆட்சியைக் கைப்பற்றி தொடர்ந்து 1979 ஆம் ஆண்டுவரை 5 முறை சர்வாதிகார ஜனாதிபதியாக பதவி வகித்தவர் பார்க் சுங்-ஹீ. அவருடைய மகள்தான்  பார்க் ஜியன்-ஹியே. 1974 ஆம் ஆண்டு இவருடைய தந்தை பார்க் சுங்-லீயை கொல்ல நடந்த முயற்சியில், இவருடைய தாய் யுக் யங்-சூ கொல்லப்பட்டார். அதன்பிறகு மூத்த மகளான இவர்தான் தென்கொரியாவின் முதல் பெண்மணியாக கருதப்பட்டார்.

 

1979 ஆம் ஆண்டு இவருடைய தந்தை பார்க் அவருடைய உளவுத்துறை தலைவர் கிம் ஜாயே-க்யுவால் கொல்லப்பட்ட பிறகு, பார்க்கின் எதிர்ப்பாளர்கள் இவரை கைதுசெய்து துன்புறுத்தலுக்கு ஆளாக்கினர். பார்க் கொரியா மொழி தவிர, ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், மான்டரின் உள்ளிட்ட பல மொழிகளை அறிந்தவர். அனைத்திலும் பட்டம் பெற்றிருக்கிறார்.

 

திருமணம் செய்துகொள்ளாத இவர் நாத்திகராக தன்னை அறிவித்துக் கொண்டவர். தொடர்ந்து அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த பார்க் 1998 முதல் 2008 ஆம் ஆண்டு வரை மூன்றுமுறை நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்திருக்கிறார். 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து கிராண்ட் நேஷனல் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தென்கொரியா முழுவதும் கட்சியின் பிரச்சாரப் பொறுப்பை ஏற்று சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தின் போது 50 வயதான கிரிமினல் குற்றவாளி ஒருவர் பார்க்கின் முகத்தில் கத்தியால் கீறினார். 11 செண்டிமீட்டர் நீளத்திற்கு காயம் ஏற்பட்டு, 60 தையல் போடப்பட்டது. இதில் கிடைத்த அனுதாபம் காரணமாக அவருடைய கட்சி உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது. இதையடுத்து தேர்தல்களின் ராணி என்று மீடியாக்கள் இவருக்கு பட்டம் கொடுத்தன. அந்த வெற்றிக்குப் பிறகு ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு சென்ற பார்க் தென்கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவை பலப்படுத்த விரும்புவதாக பகிரங்கமாக தெரிவித்தார். இதன்மூலம் அமெரிக்காவின் நம்பிக்கையை பெற்றார்.


 

koreavin kathai


 

2012 ஆம் ஆண்டு தேர்தலில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி பதவியேற்ற பார்க், தனது முதல் உரையிலேயே வடகொரியா தனது அணுஆயுத திட்டங்களைக் கைவிட்டு, அமைதி பாதைக்கு திரும்பவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அமைதியான வழியில் கொரியா ஒற்றுமைக்கு முயற்சிக்க வேண்டும் என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

 

பொறுப்பேற்றதும் அமெரிக்கா சென்று ஒபாமாவைச் சந்தித்தார். இரு நாடுகளின் உறவை மேம்படுத்த விரிவான திட்டங்களை வகுத்திருப்பதாக அவர் கூறினார். அத்துடன் வடகொரியாவுடன் அமைதியான இணைப்புக்கு பல முயற்சிகளை அறிவித்தார். முதலில் அமைதியை ஏற்படுத்த வேண்டும். பொருளாதார ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்த வேண்டும். இறுதியாக அரசியல்ரீதியான ஒருங்கிணைப்பை எட்ட வேண்டும் என்றார். தொடக்கத்தில் தேர்தலின் போதும், பொறுப்பேற்பதற்கு முன்னரும் வடகொரியா தனது இரண்டு அணு ஏவுகணைகளை ஏவிச் சோதித்து தென்கொரியாவை பதட்டப்படுத்தியது. வடகொரியாவுக்கு பொருளாதார உதவியும் அறிவித்தார் பார்க். வடகொரியா தனது அச்சுறுத்தலைக் கைவிட்ட நிலையில் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் சென்றார். இரு நாடுகளின் ஒத்துழைப்பையும் உறுதிப்படுத்திக் கொண்டார். ஜெர்மனிக்கு சென்ற பார்க், தலைமுறைகளாக பிரித்து வைக்கப்பட்டிருக்கும் கொரியா தீபகற்ப மக்களை இணைக்க வேண்டியது கட்டாயம். இருநாடுகளிலும் ஓடும் நதிகளையும், வனங்களையும் கூட்டாக நிர்வாகம் செய்ய வேண்டும். இருநாடுகளும் பயனடையும் வகையில் திட்டங்களை வகுத்தி நிறைவேற்ற வேண்டும் என்றெல்லாம் வலியுறுத்தினார்.

 

சீனா தொடங்கிய ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இணைய தென்கொரியா விண்ணப்பித்தது. ஈரான் சென்ற முதல் தென்கொரியா ஜனாதிபதியும் இவர்தான். என்னதான் பேசினாலும், நாடுகளுக்கு பறந்தாலும் 2016 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சி பெரும்பான்மையை இழந்ததுடன், நாடாளுமன்றத்தில் முதல் கட்சி என்ற தகுதியையும் இழந்தது.


 

koreavin kathai


 

அதுமட்டுமின்றி மக்கள் மத்தியிலும் இவருடைய செல்வாக்கு வெகுவாக சரிந்தது. இவருக்கு நெருக்கமான சோய் சூன்-ஸில் என்ற பெண்மணி அருச விவகாரங்களிலும், கொள்கை முடிவு எடுப்பதிலும் தலையிடுகிறார் என்ற குற்றச்சாட்டு வலுப்பெற்றது. இதுகுறித்து புலன்விசாரணை நடைபெற்றது. குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பது உறுதியானதும், 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி பார்க் கைதுசெய்யப்பட்டார். அதிகார துஷ்பிரயோகம், லஞ்சம் பெற்றது, அரசு ரகசியங்களை வெளியிட்டது என்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டந். சிறையில் இவரிடம் ஐந்து சுற்று விசாரணை நடைபெற்றது. அப்போது தன்மீதான குற்றச்சாட்டுகள் இவர் மறுத்தார்.

 

இவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 11 கோடியே 5 லட்சத்து 79 ஆயிரத்து 397 கோடி அமெரிக்க டாலர்கள் அபராதமும் விதிக்கும்படி வழக்கறிஞர்கள் வாதாடினார்கள். 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி இவர் மீதான 18 குற்றச்சாட்டுகளில் 16 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக மூன்று நீதிபதிகள் குழு அறிவித்தது. அதைத்தொடர்ந்து, பார்க்கிற்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 1800 கோடி கொரியா வொன் அபராதமும் விதிக்கப்பட்டது.

 

ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது வடகொரியாவுக்கு இணக்கமான முடிவுகள் எடுக்கும்போதெல்லாம் இவருடைய மக்கள் ஆதரவு விகிதம் அதிகரிப்பதும், எதிர்நிலைப்பாடு எடுக்கும்போதெல்லாம் மக்கள் செல்வாக்கில் சரிவு ஏற்படுவதையும் மீடியாக்கள் கருத்துக் கணிப்புகளாய் வெளியிட்டன. 2016 நாடாளுமன்றத் தேர்தல் இவருக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பதை தெளிவுபடுத்தியது.

 

koreavin kathai


 

இந்நிலையில்தான், பார்க்கிற்கு எதிராக தென்கொரியா நாடாளுமன்றத்தில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, 300 உறுப்பினர்களில் 234 பேர் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.

 

தென்கொரியா வரலாற்றில் பதவியில் இருக்கும்போதே ஒரு ஜனாதிபதிக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவருடைய பதவி பறிக்கப்பட்டது இதுதான் முதல்முறையாகும். அதையடுத்து பிரதமராக பொறுப்பு வகித்த ஹ்வாங் க்யோ-ஆஹ்ன் தற்காலிக ஜனதிபதியாக பொறுப்பேற்றார்.

 

பதவியிழந்த பார்க் முன்னாள் ஜனாதிபதிக்குரிய பலன்களான ஓய்வூதியம், இலவச மருத்துவ சேவைகள், அவருக்கு வழங்கவேண்டிய நிதியுதவிகள், உதவியாளர்கள், சமையல்காரர் என எல்லா வசதிகளும் பறிக்கப்பட்டன. அதுமட்டுமின்றி ஜனாதிபதிகளை அடக்கம் செய்யும் இடத்திற்கான உரிமையும் பரிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு பாதுகாப்பு வசதிகள் மட்டும் வழங்கப்பட்டன.

 

பதவியிழந்த பார்க் தனது வீட்டுக்கு போனபோது அவருடைய ஆதரவாளர்கள் வரவேற்றார்கள். சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்ட நிலையில், 2017 ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி தென்கொரியாவின் 19 ஜனாதிபதியை தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்கப்ப்டடது. அந்தத் தேர்தலில் மூன் ஜாயே-இன் வெற்றிபெற்று பதவியில் தொடர்கிறார்.

 

இவருடைய ஆட்சிக் காலத்தில் இரண்டு கொரியாக்களும் மிகவும் சுமுகமான உறவை உறுதி செய்து அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்கின்றன. இவரைப் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்…

 

(இன்னும் வரும்)

 

 

முந்தைய பகுதி:

மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்த தென்கொரிய ஜனாதிபதி! கொரியாவின் கதை #20



அடுத்த பகுதி:

 

கொரியா இணைப்பை நோக்கிய இறுதி முயற்சி! கொரியாவின் கதை 22