கடைசி 3 ஒருநாள் போட்டிகள், 2 டி20 போட்டிகள், 6 ஐபிஎல் போட்டிகள் என தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறார் கேப்டன் விராட் கோலி. மறுபுறம் ஐ.பி.எல். தொடர்கள், நிதாஸ் டிராபி, வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் ஆசியக்கோப்பை என லிமிடெட் ஓவர் போட்டிகளில் கேப்டனாக அணியை சிறந்த முறையில் வழிநடத்தி அசத்தி வருகிறார் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா.
மைதானத்திற்கும், எதிரணிக்கும் ஏற்ப வீரர்களை தேர்வு செய்வது, இக்கட்டான நிலையில் அணியை சிறப்பாக வழிநடத்துவது, பவுலர்களை சரியான சுழற்சி முறையில் பந்து வீசச் செய்வது, வீரர்களின் தன்மையை அறிந்து பயன்படுத்துவது, கள வியூகம் என கேப்டன்சியில் மாஸ் காட்டி வருகிறார் ரோஹித் சர்மா.
இந்த வருட ஐ.பி.எல். தொடரில் முதல் சில போட்டிகளில் ஆர்.சி.பி. தோற்றவுடன், கோலி கேப்டன்ஷிப்பில் சொதப்பி வருகிறார் என்றும், ஆர்.சி.பி. அணியின் கேப்டன் பதிவியிலிருந்து அவர் விலக வேண்டும் என சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்கள் நடைபெற்று வந்தன. கம்பீர் உள்ளிட்ட சில வீரர்களும் கடுமையாக கோலியின் கேப்டன்ஷிப்பை விமர்சித்தனர்.
தற்போது 6 போட்டிகளில் தொடர் தோல்விகளை கோலி தலைமையிலான அணி சந்தித்த நிலையில், இந்திய அணிக்கும் கேப்டன்ஷிப்பை மாற்ற வேண்டும் என வலுவாக குரல்கள் எழத் துவங்கியுள்ளன. முதல் பேட்டிங்கில் 200+ ரன்கள் குவித்தும், பவுலர்களை சரியான முறையில் சுழற்சி செய்யத் தவறியதால் தோல்வியை தழுவியது ஆர்.சி.பி.
சர்மா தலைமையில் இந்திய அணி 15 டி20 போட்டிகளில் 12 வெற்றி, 3 தோல்வி. 10 ஒருநாள் போட்டிகளில் 8 வெற்றி, 2 தோல்வி என 80% வெற்றியை பதிவு செய்துள்ளது. முதல் பேட்டிங்கில் 150 ரன்களுக்கு குறைவாக எடுத்து பல முறை வெற்றி பெற்றுள்ளது மும்பை. பலமான அணியான சென்னையை அதிக முறை வீழ்த்தியுள்ள பெருமையும் சர்மாவின் கேப்டன்ஷிப்புக்கு உண்டு. சமீபத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிராக குறைந்த ரன்கள் எடுத்தபோதும் பவுலர்களை சரியான முறையில் சுழற்சி செய்து மும்பை அணியை சிறப்பாக வழி நடத்தி வெற்றி பெற வைத்தார் ரோஹித்.
ஐ.பி.எல். தொடரில் 94 போட்டிகளில் 55 வெற்றி, 39 தோல்வி என 59% வெற்றிகளுடன் கேப்டன்ஷிப்பில் கலக்கி வருகிறார். சர்மா தலைமையில் மும்பை அணி 3 முறை ஐ.பி.எல். தொடரை வென்றுள்ளது. 2015-ஆம் ஆண்டு முதல் 7 போட்டிகளில் 5 தோல்வி, இரண்டு வெற்றி என்ற நிலையில் இருந்த மும்பை அணியை அடுத்த 7 போட்டிகளில் 6 போட்டிகள் வெற்றி பெற வைத்து ப்ளே ஃஆப் சுற்றுக்கு தகுதி பெற வைத்தார். அந்த தொடரில் இரண்டாவது முறையாக மும்பை அணி கோப்பையை வெல்ல சர்மா உதவினார்.
2014-ஆம் ஆண்டு முதல் 8 போட்டிகளில் 6 தோல்வி, இரண்டு வெற்றி என்று இருந்த மும்பை அணி அடுத்த 6 போட்டிகளில் 5 வெற்றி பெற்று ப்ளே ஃஆப் சுற்றுக்குள் சென்றது. ஐ.பி.எல். தொடரில் இக்கட்டான நிலையில் அணியை வழி நடத்துவதில் சர்மா சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
இந்த நிலையில் விராத் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்து அதிகரித்து வருகிறது. மே மாதம் நடைபெறவுள்ள உலக கோப்பை தொடரில் விராட் கோலிக்கு பதிலாக கேப்டனாக இந்திய அணியை ரோஹித் சர்மா வழிநடத்த வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள்.