Skip to main content

ஒருநாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் நீக்கப்பட்டது ஏன்? - கங்குலி பதில்!

Published on 10/12/2021 | Edited on 10/12/2021

 

ganguly virat

 

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணிகளின் கேப்டனாக இருந்து வந்த விராட் கோலி, இருபது ஓவர் உலககோப்பைக்கு பிறகு இந்தியாவின் இருபது ஓவர் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். இதனைத்தொடர்ந்து இந்தியாவின் இருபது ஓவர் அணி கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார்.

 

விராட் கோலி திடீரென ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் விராட் கோலி ஒருநாள் அணியின் கேப்டன்ஷிப்பிலிருந்து நீக்கப்பட்டது குறித்து விளக்கமளித்துள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி, 20 ஓவர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என விராட் கோலியை தாங்கள் கேட்டுக்கொண்டோம் என தெரிவித்துள்ளார்.

 

விராட் கோலி ஒருநாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து கங்குலி கூறியுள்ளதாவது: இது பிசிசிஐயும் தேர்வாளர்களும் இணைந்து எடுத்த முடிவு. உண்மையில், இருபது ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று பிசிசிஐ விராட்டைக் கேட்டுக் கொண்டது. ஆனால் அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

 

ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் தனி தனி கேப்டன்கள் இருப்பது சரியானதல்ல என தேர்வாளர்கள் நினைத்தார்கள். எனவே விராட் டெஸ்ட் கேப்டனாக தொடர்வார் என்றும் ரோகித் ஒருநாள் மற்றும் இருபது ஓவர் அணியின் கேப்டனாக பொறுப்பேற்பார் என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு குறித்து (பிசிசிஐயின்) தலைவர் என்ற முறையில் நான் விராட் கோலியிடம் தனிப்பட்ட முறையில் பேசினேன், தேர்வுக்குழு தலைவரும் அவருடன் பேசியுள்ளார்.

 

ரோகித் சர்மாவின் தலைமைத் திறன் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. விராட் டெஸ்ட் கேப்டனாக தொடருவார். இந்திய கிரிக்கெட் நல்ல கைகளில் உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். ஒருநாள் மற்றும் இருபது ஓவர் அணியின் கேப்டனாக விராட் கோலியின் பங்களிப்புக்காக நாங்கள் அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம். இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.