Skip to main content

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை! - இந்தியா வரமறுத்த ஸ்குவாஷ் வீராங்கனை

Published on 20/07/2018 | Edited on 20/07/2018

இந்தியாவில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தால் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீராங்கனை ஒருவர் இந்தியா வரமறுத்துள்ளார்.
 

ambre

 

 

சில தினங்களுக்கு முன்னர் தாம்சன் ரியூட்டர்ஸ் நிறுவனம், பெண்களுக்கு பாதுகாப்பு குறைந்த நாடு என இந்தியாவைக் குறிப்பிட்டது. இது இந்தியாவின் மீதான உலகளாவிய பார்வையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் இதுகுறித்து விவாதங்கள் கிளம்பின. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, விளையாட்டு வீராங்கனைகளும் இந்தியா வர மறுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

 

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜூனியர் ஸ்குவாஷ் விளையாட்டின் நம்பர் ஒன் வீராங்கனை ஆம்ப்ரி அலின்க்ஸ். இவர் இந்த ஆண்டு சென்னையில் நடந்துகொண்டிருக்கும் ஜூனியர் ஸ்குவாஷ் உலகக்கோப்பை போட்டியில் விளையாட தகுதிபெற்றிருந்தார். ஆனால், இந்தியாவில் சமீபத்தில் நடந்துவரும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் குறித்த செய்திகளைப் படித்த அவரது பெற்றோர், ஆம்ப்ரியை இந்தியா அனுப்புவதற்கு அனுமதிக்கவில்லை. எவ்வளவோ வலியுறுத்தியும், தங்கள் பிள்ளையின் நலனைக் கருத்தில் கொண்டு அனுப்ப மறுத்துவிட்டனர் என்கிறார் ஆம்ப்ரியின் பயிற்சியாளர் பாஸ்கல்.
 

 

 

சமீபத்தில் திருவண்ணாமலையில் உள்ள விடுதியில், ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். சென்ற ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த பெண் மாமல்லபுரத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். சென்னை அயனாவரத்தில் 12 வயது சிறுமி பாலியல் கொடூரத்திற்கு ஆளானது என பல்வேறு செய்திகள், உலக அரங்கில் இந்தியாவிற்கு மிகப்பெரிய அவப்பெயரையே பெற்றுத் தந்திருக்கின்றன.