Skip to main content

விவோ ப்ரோ கபடி 6 வது சீசனில் கோடிகளிள் ஏலம்...

Published on 27/09/2018 | Edited on 27/09/2018

இந்திய கபடி ரசிகர்களை உற்சாகப்படுத்த ப்ரோ கபடி திருவிழாவின் இந்த வருட சீசன் அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்க உள்ளது. ஒவ்வொரு வருடமும் ப்ரோ கபடியை தொலைகாட்சிகளில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. இந்தியாவில், தொலைகாட்சிகளில் கிரிக்கெட்டிற்கு அடுத்தபடியாக அதிகமாகப் பார்த்த விளையாட்டு நிகழ்வாக ப்ரோ கபடியின் 5-ஆவது சீசன் திகழ்ந்து வருகிறது. மொத்தமாக 3.3 பில்லியன் பார்வைகளையும், 100 பில்லியன் நிமிட பார்வை நேரங்களையும் கொண்டு, விளையாட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறது ப்ரோ கபடி. 

 

kabadi

 

ப்ரோ கபடி 6-வது சீசனுக்கான ஏலம் மே மாத இறுதியில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் 14 நாடுகளை சேர்ந்த 422 வீரர்கள் பங்கு கொண்டனர். வீரர்களின் தகுதியைப் பொறுத்து, ஐந்து வகைகளாக பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டனர். பிரிவு ஏ ரூ.20  லட்சம், பிரிவு பி ரூ.12  லட்சம், பிரிவு சி ரூ.8 லட்சம், பிரிவு டி ரூ. 5 லட்சம் மற்றும் எதிர்கால கபடி ஹீரோஸ் 6.6 லட்சம் என ஒவ்வொரு வகையிலும் துவக்க விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஏலத்தில் பலதரப்பட்ட மாற்றங்களும், ஆச்சரியங்களும் நிறைந்திருந்தன. சென்ற முறை தன் அணிக்கு விளையாடிய வீரர்களில், 21 வீரர்களை மட்டுமே 12  அணிகள் தக்கவைத்துக்கொண்டன.

 

இந்தியாவில் கிரிக்கெட் தவிர மற்ற எந்த விளையாட்டிலும் கோடி கணக்கில் ஒரு வீரரை ஏலம் எடுத்தது இல்லை. ஆனால் இந்த சீசன் ப்ரோ கபடி தொடரில், இந்திய அணியை சேர்ந்த 5 வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் கோடி கணக்கான தொகைக்கு ஏலம் போனது கபடி உலகில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதிகபட்சமாக இந்திய வீரர் மோனு கோயட் ரூ.1.51 கோடிக்கு ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியால் எடுக்கப்பட்டார். அடுத்ததாக ராகுல் சவுத்ரி ரூ.1.29 கோடி - தெலுங்கு டைட்டன்ஸ், தீபக் நிவாஸ் ஹூடா ரூ.1.15 கோடி - ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ், நிடின் தோமர் ரூ.1.15 கோடி - புனேரி பல்தன்ஸ், ரிஷாங்க் தேவதிக ரூ.1.11 கோடி - யூ பி யோதா, ஈரான் நாட்டு வீரரான ஃபாஸெல் அட்ராகலி ரூ.1 கோடி - யு மும்பா அணி என கபடி வரலாற்றில் முதல்முறையாக கோடிகளில் புரண்டது இந்த வருட ப்ரோ சீசன் 6-க்கான ஏலம். 

 

kabadi

 


தொடரில் பங்குபெறும் 12 அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது. பிரிவு ஏ-ல் யு மும்பா, புனேரி பல்தன்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், குஜராத் போர்டுன்ஜைன்ட்ஸ் மற்றும் தபாங் டெல்லி ஆகிய 6 அணிகள் இடம் பெற்றுள்ளன. பிரிவு பி-ல் தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைடன்ஸ், யு பி யோதா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் ஆகிய 6 அணிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் 22 போட்டிகளில் விளையாட உள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவிற்கு உள்ளே 15 போட்டிகளிலும், பிரிவிற்கு வெளியே 7 போட்டிகளிலும் விளையாட உள்ளது. எலிமினேட்டர் மற்றும் குவாலிஃபயர் என ப்ளே ஆப் சுற்றுகள் நடைபெற உள்ளன. 

 

 

ஒரு அணியில் குறைந்தது 18  வீரர்களும், அதிகபட்சமாக 24 வீரர்களும் இடம் பெற வேண்டும். இதில் ஒரு அணியில் 2 முதல் 4  வெளிநாட்டு வீரர்கள் மட்டும் இருக்க வேண்டும். மூன்று மாதங்கள் நடைபெறும் 6-வது சீசனில்,  ஒரு நாளைக்கு 2 போட்டிகள் வீதம் மொத்தம் 138 போட்டிகள் நடைபெற உள்ளன. 12 அணிகள் பங்குபெறும் இந்த சீசனின் இறுதி போட்டி ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்திய கபடி அணியின் கேப்டன் அஜய் தாகூர், தமிழ் தலைவாஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். இந்தியாவில் கபடியானது தற்போது மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. இதற்கு காரணம் ஐ.பி.எல் பாணியில் நடந்து வரும் ப்ரோ கபடி தான். சிறந்த திறமை வாய்ந்த வீரர்களை அடையாளம் கண்டு வெளிக்கொண்டு வருகிறது ப்ரோ கபடி தொடர். இதன் மூலம் சிறந்த வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்று வருகின்றனர்.