கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்ச்சத்து குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ். கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும்படி தமிழக அரசு அறிவித்துள்ளது. கோடை காலம் தொடங்கியுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
மேலும் கோடை காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுவதால் மேற்குத்தொடர்ச்சி மலை உள்ளிட்ட வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் உணவு மற்றும் குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அத்தோடு இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தமிழகத்திற்கு தொடர்ந்து வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய சூழலில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் நேற்று (03.05.2024) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும். தருமபுரி, திருத்தணி மற்றும் திருப்பத்தூர் உட்பட 10 இடங்களில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். இன்று (அதாவது 3 ஆம் தேதி) முதல் 6 ஆம் தேதி வரை வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும். நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் மே 7 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று (04.05.2024) முதல் கத்தரி வெயில் தொடங்குகிறது. வரும் 28 ஆம் தேதி வரை என 25 நாட்களுக்கு இந்த கத்தரி வெயில் நீடிக்க உள்ளது. அதே சமயம் கத்தரி வெயில் காலத்தின் முதல் 7 நாட்களுக்கு வெப்பம் அதிகளவில் இருக்க வாய்ப்புள்ளது என வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.