இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் தன்மீதான விமர்சனங்களை மாற்றியமைத்திருக்கிறார் கேப்டன் விராட் கோலி. சொல்லப்போனால் இந்திய அணியில் மற்ற எந்த வீரரையும் விட அவர் சிறப்பாகவே செயல்பட்டார் என்று சொல்லலாம்.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்திய அணியின் மொத்த ரன்களில் 54 சதவீதம் ரன்களை எடுத்திருந்த விராட் கோலி, இரண்டு இன்னிங்ஸ்களிலும் தலா 149 மற்றும் 51 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணியின் மற்ற வீரர்கள் உறுதுணையாக இருந்திருந்தால், முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருக்கலாம் என்ற விமர்சனங்கள் எழுந்ததோடு, அனைத்து தரப்பிலும் நல்ல பாராட்டுகளை விராட் கோலி பெற்றுள்ளார்.
இந்நிலையில், விராட் கோலிக்கும் மற்ற வீரர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மன் விவரித்துள்ளார். ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவரிடம் இந்தக் கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்போது அவர், ஒவ்வொரு போட்டிக்கும் அணி தனிப்பட்ட திட்டத்தோடு களமிறங்கும். அதைச் செயல்படுத்தும் மனவலிமையும், உள்ளுணர்வுகளைக் கட்டுப்படுத்தும் திறமையும்தான் மற்றவர்களிடம் இருந்து அவரை பிரித்துக் காட்டுகிறது. போட்டுச்சூழலை மாற்றும் திறனிலும் அவர் அபாரமானதுதான்’ என தெரிவித்துள்ளார்.