Skip to main content

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-இலங்கை!

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

 India-Sri Lanka in the final!


இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றின் ஐந்தாவது ஆட்டத்தில் நேற்று (14-09-2023) பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதின. இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்குள் நுழையலாம் என்பதால் இரு அணிகளுமே வெற்றி பெற வேண்டும் என்று முனைப்பு காட்டின.

இந்த நிலையில் நேற்று பிரேமதாசா ஸ்டேடியத்தில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணி சார்பில் தொடக்கத்தில் அப்துல்லா-ஃபகர் ஜமான் கூட்டணி களமிறங்கியது. போட்டியின் தொடக்கத்திலே பாகிஸ்தான் அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. அடுத்து இறங்கிய அணியின் கேப்டன் பாபர் அசாம் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால், 73 ரன்னிற்கு 2 விக்கெட்டை பாகிஸ்தான் இழந்திருந்தது. 

 

பின்னர் களமிறங்கிய ரிஸ்வான் அதிரடி காட்ட, அப்துல்லா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் கடந்த அப்துல்லா 52 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இவரைத் தொடர்ந்து, முகமது ஹாரிஸ் 3 ரன்களுடனும், முகமது நவாஸ் 12 ரன்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இப்படி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்து தடுமாறியது. ரிஸ்வான் மட்டும் சிறப்பாக விளையாடி களத்தில் நிற்க அவருக்கு உறுதுணையாக இப்திகார் அஹ்மத் ஓரளவு அதிரடி காட்ட, பாகிஸ்தான் சரிவில் இருந்து மீண்டு கணிசமான ரன்களை குவிக்கத் தொடங்கியது. 27.4 ஓவரில் 130/5 என இருந்த போது மழை பெய்ததால் ஆட்டத்தின் ஓவரை 42 ஆக குறைத்தனர். பின்னர், அஹ்மத் 47 ரன்கள் எடுத்து வெளியேற பாகிஸ்தான் 238 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்திருந்தது. இந்த நிலையில் இருந்தும் அடுத்து களமிறங்கிய சதாப் கான் 3 ரன்னில் வெளியேற, அப்ரிடி களமிறங்கினார். ஆனால், ரிஸ்வான் மட்டும் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 86 ரன்னில், 6 பவுண்டரிகள், 2 சிக்சர் என பறக்கவிட்டார். முடிவில் பாகிஸ்தான் 7 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்தது. இலங்கை பவுலிங்கில், பதிரான 3 விக்கெட்டுகளும், மதுசன் 2 விக்கெட்டுகளும், தீக்சனாவும் வெல்லலகேவும் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.

 

பின்னர், 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக நிசங்கா-பெரேரா கூட்டணி களமிறங்கியது. ஆனால், 3.2வது ஓவரில் பெரேரா 17 ரன்கள் எடுத்து ரன்-அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, குஷால் மென்டிஸ் களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து, சிறப்பாக விளையாடி வந்த நிசங்கா-மென்டிஸ் கூட்டணியில் எதிர்பாராத விதமாக பெரேரா 29 ரன்களில் ஆட்டமிழக்க 77 ரன்களுக்கு 2 விக்கெட்  என்று தடுமாறியது. இவரை அடுத்து சமரவிக்ரமா களம்கண்டார். ஒரு புறம் மென்டிஸ் ரன்களை விளாசிக் கொண்டிருக்க, அவருக்கு பக்க பலமாக செயல்பட தொடங்கினார் சமரவிக்ரமா. பின்னர், மென்டிஸ் அரை சதம் விளாசி ஆட்டத்தை இலங்கை பக்கம் திருப்பினார். இந்த கூட்டணி மிகச் சிறப்பாக இலங்கையை வெற்றிப் பாதை நோக்கி நகர்த்திச் சென்றனர். இந்த நிலையில் திடீரென சமரவிக்ரமா 48 ரன்களில் அரை சதத்தை தவறவிட்டு வெளியேறினார். அடுத்து நான்காவது விக்கெட்டுக்கு விளையாட வந்தார் அசலங்கா. இவர், நிதானமாக விளையாடத் தொடங்கியது இலங்கை அணிக்கு நம்பிக்கை அளித்தது. 

 

ஒரு கட்டத்தில் இலங்கை வென்றுவிடும் என்ற சூழலும் உருவாகியது. 8 பவுண்டரிகளுடன், 1 சிக்ஸர் என சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த மென்டிஸ் 91 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வரிசையாக ஷானகா, டி சில்வா, துணித் வெல்லலகே, மதுசன் சொற்ப ரன்களில் வெளியேற தோல்வி நிச்சயம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. அதே சமயம், அசலங்கா விடாமுயற்சியுடன் போராடிக் கொண்டிருந்தார். இலங்கையின் சரிவிற்கு காரணம் 41 வது ஓவரில் அப்ரிடி வீழ்த்திய 2 விக்கெட் தான். இதனால், இலங்கை அணி கடைசி(42)வது ஓவரில்  8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழல் உருவானது. கடைசி ஓவரை ஜமான் கான் வீச மதுசன் முதல் பந்தை எதிர்கொண்டார். அந்த இறுதி ஓவரில் இலங்கை முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டும் எடுத்து  1 விக்கெட்டை இழந்திருந்தது. 

 

இதனால் இலங்கை வெற்றி பெற கடைசி 2 பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் 5வது பந்தை அசலங்கா எதிர்கொண்டு பவுண்டரிக்கு திருப்ப அரங்கம் அதிர இலங்கை ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இருந்தும் பாகிஸ்தான் அணியினருக்கு கடைசி பந்தில் வாய்ப்பு இருந்தது. அதனை டாட் பந்தாக ஆக்கியிருந்தால் வென்றிருக்கலாம். ஆனால், அதன் கனவை அசலங்கா தகர்த்து 2 ரன்கள் எடுத்து ஸ்கோரை சமன் செய்ய வைத்தார். இறுதி வரை களத்தில் நின்ற அவர், 49 ரன்கள் சேர்த்திருந்தார். அதில், 3 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடங்கும். போட்டி சமனில் முடிந்ததால் டக்வர்த் லெவிஸ் முறைப்படி இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது நேற்றைய ஆட்ட நாயகன் விருது 91 ரன்கள் எடுத்த குஷால் மென்டிஸுக்கு வழங்கப்பட்டது. 

 

ஒரு நாள் கிரிக்கெட்டின் உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் தோற்றது அந்த அணிக்கு பெரிய ஏமாற்றமே. அதே சமயம், இலங்கை சென்ற வருடம் ஆசிய கோப்பை 2022ஐ வென்றுவிட்டு. இந்த வருடமும் இறுதி போட்டிக்குள் நுழைந்து பலமான அணி என்பதை நிரூபித்துள்ளது. இதன் மூலம் வருகிற ஞாயிறு 17 செப்டம்பர் இந்தியா-இலங்கை அணிகள் ஆசிய கோப்பை 2023ன் இறுதி போட்டியில் விளையாடவுள்ளது. இந்த ஆட்டம் பிரேமதாசா ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்கும்.

 

இதற்கிடையில் இன்றைய (15-09-2023) ஆட்டத்தில்  இந்தியா-வங்கதேச அணிகள் மோதவுள்ளது. இதில், எந்த அணி வென்றாலும் இறுதி போட்டியில் மாற்றம் ஏற்படாது. இந்த போட்டி மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது.