
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கத்தின் துணைத் தலைவரும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினரும், பட்டிமன்ற பேச்சாளருமான கவிஞர் நந்தலாலா (வயது 70), உடல்நலக்குறைவு காரணமாக இன்று (04.03.2025) காலை காலமானார் இதய அறுவை சிகிச்சை செய்திருந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் பெங்களூருவில் உயிரிழந்தார். நந்தலாலாவின் உடல் திருச்சியிலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு நாளை (05.03.2025) இறுதிச்சடங்குகள் நடைபெறுமென தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கவிஞர் நந்தலாலா மறைவுக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும் பட்டிமன்றப் பேச்சாளருமான கவிஞர் நந்தலாலா உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மேடைகளில் முழங்கியவர். அவருக்கே உரிய நகைச்சுவை மற்றும் சீரிய சிந்தனைகளாலும் தொலைக்காட்சிகளில் பகுத்தறிவு கருத்துக்களையும், அறிவுப்பூர்வமான சிந்தனைகளையும் மக்களிடையே கொண்டு சென்றவர்.
இவரின் மறைவு இயல், இசை, நாடகத்துறைக்கு ஈடு செய்யமுடியாத இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சக நண்பர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.