நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் அனைவரும் இந்திய அணியின் சுழலில் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக லபுசானே 49 ரன்களும் ஸ்மித் 37 ரன்களும் அலெக்ஸ் கேரி 36 ரன்களையும் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியில் ஜடேஜா 5 விக்கெட்களையும் அஸ்வின் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 77 ரன்களை எடுத்து 1 விக்கெட்டை இழந்து இருந்தது. ரோஹித் சர்மா 69 பந்துகளில் 56 ரன்களை விளாசியும் அஸ்வின் ரன்கள் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முதல் நாள் பேட்டிங்கின் போது 120 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இருந்த நிலையில் பந்து வீச வந்த ஜடேஜா திடீரென சிராஜிடம் சென்று அவரது கைகளில் ஏதோ ஒன்றை வாங்கி தனது கைகளில் பூசினார். தான் எந்த விரலால் பந்தை திருப்பச் செய்வாரோ அந்த விரலில் அதைப் பூசியது சர்ச்சை ஆனது. ஜடேஜா பந்தை சேதப்படுத்தினாரா என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் விமர்சித்தன.
போட்டி முடிந்த பின் ஜடேஜாவையும் கேப்டன் ரோஹித் சர்மாவையும் தனியாக அழைத்து நடுவர் விவாதித்துள்ளார். அதில் ஜடேஜா தனது விரல்களில் தடவியது வலி நிவாரணி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பந்து வீசுபவர்கள் கைகளில் பற்றுதலுக்காக திரவியங்களைத் தடவுவது விதிமுறைகளுக்கு உட்பட்டதுதான் என்றும் ஜடேஜா பற்றுதலுக்காகவே தடவி இருந்தாலும் அது குற்றம் இல்லை என ஜடேஜாவிற்கு ஆதரவுக் குரல்கள் ஒலித்து வருகின்றன.
இருந்த போதும் நாக்பூர் டெஸ்ட் போட்டியில் கிரிக்கெட் விதிகளை மீறியதாக ரவீந்திர ஜடேஜாவிற்கு போட்டியின் சம்பளத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டி நடுவர்களிடம் தெரிவிக்காமல் கை விரலில் வலி நிவாரணி மருந்தை பயன்படுத்தியதால் அபாராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.