Skip to main content

“அனைத்து அணிகளும் புதிதாக வீரர்களைத் தேடினால்... தோனி மட்டும்...” - ஆகாஷ் சோப்ரா கருத்து  

Published on 20/04/2023 | Edited on 20/04/2023

 

"If all teams are looking for new players,  Dhoni..." comments Akash Chopra

 

நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளிலும் சில வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். அதில் சென்னை அணியின் ரஹானே மற்றும் ஷிவம் துபே அடக்கம். 24 ஆவது லீக் போட்டியில் ஆர்.சி.பி அணிக்கு எதிராக கான்வே, ரஹானே, துபே ஆகியோர் அதிரடியாக ஆடியதில் சென்னை அணி 226 ரன்களைக் குவித்தது. பெங்களூர் அணியை வீழ்த்தி வெற்றியும் பெற்றது.

 

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா சென்னை அணியின் கேப்டன் தோனியை வெகுவாகப் பாராட்டியுள்ளார். இது குறித்து தனது யுடியூப் தளத்தில் பேசிய ஆகாஷ் சோப்ரா, “பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரஹானே களத்தில் இருந்த நேரம் வரையில் சிறப்பான ஆட்டத்தை  வெளிப்படுத்தினார். ஷிவம் துபேவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷிவம் துபே இதற்கு முன் ஆர்.சி.பி மற்றும் ராஜஸ்தான் அணிக்காக ஆடி இருந்தாலும் தோனி தலைமையின் கீழ் விளையாடும் போது அவர்களை வீரர்களாக உருவாக்குகிறார். மாறாக மற்ற அணிகளோ வீரர்களை தேடுகின்றன. தோனிக்கு கீழ் விளையாடும் வீரர்களின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது மிகவும் அழகாக மனதை கவர்வதாக உள்ளது.

 

ஷிவம் துபேவின் கதையும் அப்படித்தான். ரஹானே கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளிலும் பார்த்தோமானால் அவரிடம் வித்தியாசத்தைக் காணலாம். கான்வே அருமையான வீரர் அதில் எந்த சந்தேகமும் இல்லை. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதுவும் எவ்வித அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக ஆடினார்” எனக் கூறினார். இந்த போட்டியில் கான்வே 83 ரன்களையும் ரஹானே 20 பந்துகளில் 37 ரன்களையும் துபே 37 பந்துகளில் 52 ரன்களையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பெங்களூர் அணியின் பந்துவீச்சு குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, “போட்டியில் பெங்களூர் அணிக்கு அனைத்தும் சரியாகிவிட்டதாக நினைத்தேன். ஆனால் ஹசரங்கா இரண்டு ஓவர்களை மட்டுமே வீசி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். ஆனால் விஜயகுமார் வைஷாக் அதிகமான ரன்களைக் கொடுத்தார். எனது கருத்துப்படி ஹசரங்கா பந்து வீசாதது வெற்றியை தவறவிட்டதாகும்” எனக் கூறினார். விஜய்குமார் வைஷாக் 4 ஓவர்கள் பந்து வீசி 1 விக்கெட்டை மட்டுமே எடுத்து 62 ரன்களை விட்டுக்கொடுத்ததும் ஹசரங்கா 2 ஓவர்கள் பந்து வீசி 1 விக்கெட்டை எடுத்து 21 ரன்களை விட்டுக்கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.