
எதிரியை பாலியல் வழக்கில் சிக்க வைக்க பெண் ஒருவர் செய்த சதி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், காந்தி உதயன் அருகே பெண் துப்பாக்கியால் சுடப்பட்டு காயப்பட்டு இருப்பதாக பரேலி காவல் நிலையத்திற்கு கடந்த மார்ச் 29ஆம் தேதி தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் காயப்பட்ட பெண்ணின் மருமகள் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், ஒரு மருந்துக் கடையில் இருந்து பொருளை வாங்கிவிட்டு வெளியே வந்தபோது, ஒரு காரில் வந்த ஐந்து ஆண்கள் அவரைக் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, துப்பாக்கியால் சுட்டு காந்தி உத்யான் அருகே வீசப்பட்டதாக தெரிவித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, பெண்ணின் உடலில் பாய்ந்த குண்டு துப்பாக்கியால் ஏற்பட்ட காயத்தால் ஏற்பட்டதல்ல என்றும், அறுவை சிகிச்சை மூலம் அது செருகப்பட்டது என்றும், அறுவை சிகிச்சை வடுக்கள் இன்னும் அப்படியே இருப்பதாகவும் மருத்துவப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.
இந்த மருத்துவ அறிக்கை, போலீசாரிடையே மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியது. பெண் சுடப்பட்டதாகக் கூறப்பட்ட இடத்தில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்யப்பட்டது. அதில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் நேரத்தில் அந்த பெண் தனியாக ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் பயணத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தனது எதிரிகளை வழக்கு ஒன்றில் சிக்க வைக்க அந்த பெண் சதித்திட்டம் தீட்டியுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
தனது எதிரியான உள்ளூர் அரசியல்வாதியையும் அவரது மகனையும் பொய் வழக்கில் சிக்க வைக்க, மருத்துவமனை ஊழியர் மற்றும் போலி மருத்துவர் மூலம் தனக்கு தானே துப்பாக்கி தோட்டாவை அந்த பெண் அறுவை சிகிச்சை செய்து சொருகியுள்ளார். பின்னர், தோட்டாவிலிருந்து வரும் தூள் எரிவதைப் பிரதிபலிக்கும் வகையில் சூடான நாணயத்தால் அந்தப் பகுதியைப் காயப்படுத்தியுள்ளார். அதன் பிறகு, தான் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போலீசில் பொய்யாக புகார் தெரிவித்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.