16 ஆவது ஐபிஎல் லீக் தொடரின் 57 ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் மும்பை - குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 218 ரன்களை எடுத்தது. இது குஜராத் அணிக்கு எதிராக ஒரு அணி பதிவு செய்யும் அதிகபட்ச ஸ்கோராகும். அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 103 ரன்களை எடுத்தார். ஐபிஎல் போட்டிகளில் அவரது முதல் சதம் இதுவாகும். குஜராத் சார்பில் ரஷித் கான் 4 விக்கெட்களை வீழ்த்தினார். தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணி மளமளவென விக்கெட்களை பறிகொடுத்தது. 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 191 ரன்களை மட்டுமே எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
அதிகபட்சமாக ரஷித் கான் 79 ரன்களை குவித்தார். மும்பை அணி சார்பில் ஆகாஷ் மாத்வால் 3 விக்கெட்களையும் பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். நடப்பு சீசனில் மிடில் ஓவர்களில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பியூஷ் சாவ்லா 17 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் ஜடேஜா 16 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஒரு போட்டியில் குஜராத் அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரஷித் கான் இன்று மட்டும் 10 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.
இன்றைய போட்டியில் ரஷித் கானுக்கு கை கொடுக்க ஒரு வீரர் இருந்திருந்தால் கட்டாயம் குஜராத் வெற்றி பெற்றிருக்கும் என்பது நிதர்சனம். தனியாக போராடி ஆட்டத்தை பரபரப்பாக்கிய ரஷித், கை கொடுக்க இணை இருந்திருந்தால் ஆட்டத்தை குஜராத் அணிக்கு சாதகமாக முடித்து வைத்திருப்பார்.