16ஆவது ஐபிஎல் சீசனின் 13 வது லீக் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. மாலை நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய விருத்திமான் சகா மற்றும் சுமன் கில் ஜோடி பொறுமையான துவக்கத்தை தந்தது. விருத்திமான் சகா 17 ரன்களில் ஆட்டம் இழக்க சுமன் கில் நிலையாக ஆடி ரன்களை சேர்த்த வண்ணம் இருந்தார். அணியின் ஸ்கோர் 100 ரன்களை எட்டிய பொழுது சுமன் கில் 39 ரன்களில் ஆட்டம் இழந்தார். களம் இறங்கியதில் இருந்து அதிரடி காட்டிய தமிழக வீரர் சாய் சுதர்சன் 38 பந்துகளில் 53 ரன்கள் குவித்து வெளியேற பின் வரிசையில் வந்த விஜய் சங்கர் அதிரடியான ஆட்டம் ஆடி 24 பந்துகளில் 63 ரன்கள் குவித்து குஜராத் அணி இமாலய இலக்கை நிர்ணயிக்க உதவினார். கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன் மட்டும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
பின் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரஹமதுல்லா குர்பாஸ் மற்றும் ஜெகதீசன் சொற்ப ரன்களில் வெளியேற பின் வரிசையில் வந்த வீரர்கள் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். வெங்கடேஷ் ஐயர் 40 பந்துகளில் 83 ரன்களும் நிதிஷ் ரானா 29 பந்துகளில் 45 ரன்கள் குவித்த பின் ஆட்டமிழந்தனர். அதிரடி ஆட்டக்காரர்கள் ரசல் ஒரு ரன்னிலும் சுனில் நரேன் ரன்களை ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்க பரபரப்பு தொற்றிக்கொண்டது. இறுதி ஓவர்களில் கொல்கத்தா அணி வெற்றி பெற 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களத்தில் இருந்த ரிங்கு சின் ஆட்டத்தின் இறுதி 5 பந்துகளை சிக்ஸர்களுக்கு பறக்க விட்டு ஆட்டத்தின் போக்கை மாற்றி கொல்கத்தா அணிக்கு வெற்றி தேடித்தந்தார். கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அசத்திய மூன்று வீரர்களும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் வென்றதன் மூலம் கொல்கத்தா அணி மூன்றில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2 இடத்திற்கு முன்னேறியது. குஜராத் அணி மூன்றில் இரண்டு போட்டிகள் வெற்றி பெற்று 4 ஆவது இடத்தில் உள்ளது.