உலகக்கோப்பையில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய அந்த அணி இந்திய ஸ்பின்னர்களை வெளுத்து வாங்கியது. குல்தீப் மற்றும் சாஹல் ஓவர்களில் 140 ரன்களுக்கு மேல் அடித்து அதிரடி காட்டியது இங்கிலாந்து அணி. 337 ரன்களை அடித்த அந்த அணி 338 என்ற கடினமான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது. இதனையடுத்து ஆடிய இந்திய அணி ரன்கள் எடுக்க திணறிய நிலையில் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்திய அணியின் இந்த தோல்வியை பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி இந்திய அணியின் தோல்வி குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவரது ட்வீட்டில், "இப்படி கூறுவது எனது மூடநம்பிக்கை என்றே கூறுங்கள். ஆனால், இந்திய அணி உலக கோப்பையில் தோல்வி அடைய காரணம் புதிய ஜெர்சிதான்’ என பதிவிட்டுள்ளார். அவரது இந்த ட்வீட்டுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.