தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து 2024 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023 நடத்தப்பட உள்ளது. 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நடத்தப்படும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் - 2023இல் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 5500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள், 1600க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள், 1000க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் 1200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.
மேலும், இந்தப் போட்டியில் 27 வகையான விளையாட்டுகளுடன், தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் டெமோ விளையாட்டாக (Demo Sport) இடம்பெற உள்ளது. இந்நிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிக்கான திருவள்ளுவர் இலச்சினையை வெளியிட்டார். இந்த இலச்சினை தமிழ்நாட்டின் ஒற்றுமை, விளையாட்டுத் திறன் மற்றும் தமிழ் உணர்வினைப் பறைசாற்றுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மத்திய இளைஞர் விவகாரம், விளையாட்டு மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் போட்டியின் சின்னமாக வீர மங்கை வேலு நாச்சியாரின் உருவத்தை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.