காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத அம்பதி ராயுடு அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்விக்கு சென்னை அணியின் சி.இ.ஓ. விளக்கம் அளித்துள்ளார்.
13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் இத்தொடருக்கான தங்களது முதல் போட்டியை விளையாடி முடித்துள்ளன. சென்னை அணியின் அதிரடி வீரரான அம்பதி ராயுடு, ராஜஸ்தான் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்கு தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதால் அணியில் இடம்பெறவில்லை எனக் கூறப்பட்டது.
மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியின்போது, ராயுடு அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 71 ரன்களைக் குவித்தார். அவரது அதிரடி ஆட்டம் அணியின் வெற்றிக்கு பெரிய அளவில் கைக்கொடுத்தது. இதனால், காயம் காரணமாக ராயுடு விளையாடாதது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன், ராயுடுவிற்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர், "கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ராயுடு தொடைப்பகுதியில் ஏற்பட்டுள்ள தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வருகிறார். அதனால் அடுத்த போட்டியில் அவரால் பங்கெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" எனக் கூறினார்.