தோனி ஓய்வு விஷயத்தில் பிசிசிஐ நடந்து கொண்ட விதம் சரியானதல்ல என பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சக்லைன் முஷ்டாக் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் மூத்த வீரரான தோனி கடந்த சுதந்திர தினத்தன்று சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது உலக கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அதனையடுத்து பல நாடுகளைச் சேர்ந்த வீரர்களும், ரசிகர்களும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சக்லைன் முஷ்டாக் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், "நான் எப்போதும் நேர்மறையான விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசுவேன். என் மூலம் எந்த ஒரு எதிர்மறையான விஷயமும் பரவக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பேன். ஆனால் இப்போது ஒன்றை கூறியே ஆகவேண்டும். தோனி ஓய்வு விஷயத்தில் பிசிசிஐ நடந்து கொண்ட விதம் அவர்களது தோல்வியைத்தான் காட்டுகிறது. ஒரு மூத்த வீரரை சரியாக நடத்தவில்லை. அவரின் ஓய்வு இது போன்று இருந்திருக்கக்கூடாது. இவ்வார்த்தையை நான் என் இதயத்திலிருந்து கூறுகிறேன். தோனியின் ரசிகர்களும் இதேதான் நினைப்பார்கள் என்று நம்புகிறேன். ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடுவது மட்டுமே சற்று ஆறுதலான விஷயம்" என்றார்.
தோனிக்கு முறைப்படி 'பிரியா விடை' கொடுக்க ஒரு போட்டியினை நடத்த வேண்டும் என பல மூத்த வீரர்களும், ரசிகர்களும் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். பிசிசிஐ-யும் ஐபிஎல் தொடருக்குப் பின் இதை பரிசீலனை செய்ய இருப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.