13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 21-வது லீக் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில், சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. சென்னை அணியின் நட்சத்திர வீரரான பிராவோ நேற்று தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். நேற்றைய போட்டியில் நான்கு ஓவர்கள் பந்து வீசிய பிராவோ 37 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கொல்கத்தா அணியின் 9-வது விக்கெட்டாக ஷிவம் மவி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் பிராவோ வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் பிராவோ 5-வது இடத்தில் உள்ளார். முதல் நான்கு இடங்களில் முறையே மலிங்கா(170), அமித் மிஸ்ரா(160), பியூஸ் சாவ்லா(156), ஹர்பஜன் சிங் (150) உள்ளனர். தன்னுடைய பிறந்த நாளில் பிராவோ இந்த சாதனையைப் படைத்ததையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.