2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னர் மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஐபிஎல் அணிகள், தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அண்மையில் வெளியிட்டன. இதனையடுத்து, மெகா ஏலத்தில் எந்த அணிகள் எந்தெந்த வீரர்களை வாங்கப் போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல் ஏலம், பிப்ரவரி மாதம் 7 மற்றும் 8 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, மீண்டும் இந்தியாவில் சில பகுதிகளில் கரோனா அதிகரிக்கத் தொடங்கியதாலும், ஒமிக்ரான் அச்சம் காரணமாகவும் 2022ஆம் ஆண்டு ஐபிஎல்-லுக்குப் பிசிசிஐ மாற்றுத் திட்டத்தை யோசித்துவருவதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் கூறியுள்ளன.
கரோனா காரணமாக 2020ஆம் ஆண்டு ஐபிஎல், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. 2021ஆம் ஆண்டு ஐபிஎல் இந்தியாவில் தொடங்கினாலும் கரோனா பரவலால் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இதன் காரணமாக 2022ஆம் ஆண்டு ஐபிஎல்லை எந்தவித சிக்கலுமின்றி பிசிசிஐ நடத்த விரும்புகிறது. எனவே கரோனா பாதிப்பு அதிகரித்தால், மொத்த ஐபிஎல் போட்டிகளையும் மும்பை மற்றும் புனேவிலோ அல்லது குஜராத்தின் அகமதாபாத், பரோடா, ராஜ்கோட் ஆகிய நகரங்களிலோ நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகவும், இதுதொடர்பாக விரைவில் அணி உரிமையாளர்களுடன் பிசிசிஐ ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறியுள்ளன.
2022 ஐபிஎல் தொடரை ஏப்ரல் 2ஆம் தேதி சென்னையில் தொடங்க பிசிசிஐ திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.