இன்றைய இளைஞர்களின் மிக முக்கிய பிரச்சனை அளவுக்கு மீறிய கோபம். இதனால் பெரும்பாலானவர்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அளவுக்கு மீறிய கோபம் உயிருக்கே ஆபத்தாக முடிந்த சம்பவங்களும் நிறைய நடந்துள்ளன. இவ்வாறு கட்டுப்படுத்த முடியாமல் வரும் கோபத்தை நாம் நம்முடைய கட்டுக்குள் வைக்கவில்லை என்றால் அதனால் நாம் அடையும் சிக்கல்கள் என்ன, பிறருக்கு அதனால் ஏற்படும் கஷ்டங்கள் என்ன என்பதை ஒரு கதை மூலம் காணலாம்.
ஒரு இளைஞனுக்கு அதிகமாக கோபம் வந்துகொண்டே இருந்துள்ளது. ஒருநாள் அவனுடைய அப்பா அவனிடம் சுத்தியலும், கை நிறைய ஆணிகளையும் கொடுத்தார். இனிமேல் கோபம் வரும் போது எல்லாம் வீட்டின் பின்பக்க சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார். முதல்நாள் 10 ஆணி, மறுநாள் 7 ஆணி, அடுத்த நாள் 5 ஆணி, பிறகு 2 ஆணி என அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. ஒரு நாள் அவன் ஒரு ஆணி மட்டும் அடித்தான். பிறகு தன் அப்பாவிடம் 45 ஆணிகள் இதுவரை அடித்துள்ளேன். இனிமேல் எனக்கு கோபம் வராது என்று கூறினான். இனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு அணியாக பிடிங்கி விடு என்று அவருடைய அப்பா அவனிடம் கூறியுள்ளார். 45 நாட்களில் அனைத்து ஆணிகளையும் பிடுங்கிய அவன், தன் தந்தையை அழைத்து வந்து அந்த இடத்தை காட்டினான். உடனே அவர், ஆணிகளை பிடுங்கிவிட்டாய், ஆனால் சுவற்றில் உள்ள ஓட்டைகளை என்ன செய்வாய் என்று கேட்டார். உன் கோபமும், இந்த சுவரை போல் பிறரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா? என்றார். அந்த பையன் அவமானத்தால் தலைகுனிந்து நின்றான். அளவுக்கு மீறிய கோபம் ஆபத்தில் முடியும் என்பதே இந்த கதையின் நீதி!