உடலில் வலி தரக்கூடிய இடங்களில் குதிங்காலுக்கு முக்கியப்பங்கு உள்ளது. "காலை ஊன்றி நடக்கும் போது வலிக்கிறது" என்பதுதான் இந்த வலியுடையோர் கூறும் முதல் அறிகுறி. முக்கியமாக, "இரவில் தூங்கி காலையில் விழித்தவுடன், காலை ஊன்றவே முடிவதில்லை" எனவும், "எங்காவது நீண்ட நேரம் அமர்ந்துவிட்டு, பின் நடக்கத் தொடங்கும்போது அதிக வலி இருக்கிறது" என்றும் கூறக் கேட்டிருப்போம்.
அப்படி என்னதான் இருக்கிறது- பாதத்திலும், குதிங்காலிலும்?
பாதம் என்பது, நம் உடலில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு பாகம். பாதம் கூம்பு போன்ற வடிவம் உடையது. கால்கேனியஸ் (Calcaneus) என்ற குதிங்கால் எலும்பில் தொடங்கி, ஐந்து பாகமாக விரிந்து ஐந்து விரல்களுக்கும் செல்லும் தசைகளை உடைய கூம்பு வடிவிலான பாகம் இது. குதிங்கால் எலும்பில் தோன்றும் பிரச்சனைகளும், ஐந்து பிரிவாக விரிந்து செல்லும் தசைகளில் ஏற்படும் பிரச்சனைகளும், தசையை சூழ்ந்துள்ள தோலின் அடிப்பாகத்தில் ஏற்படும் பிரச்சனைகளும், குதிங்கால் வலியாகப் பிரதிபலிக்கிறது.
குதிங்கால் எலும்பில் ஏற்படும் பிரச்சனைகள்
1. குதிங்கால் அடி எலும்பில் ஏற்படும் தொடர் காயம், எலும்பு வளர்ச்சியை தூண்டுகிறது. அவ்வளர்ச்சியில் சேரும் கால்சியம், Calcaneal Spur எனப்படும் குதிங்கால் எலும்பின் வெளிவளர்ச்சியாக மாறி, அப்பகுதியின் அடியில் உள்ள தசைகளில் அழுத்தி வலியை ஏற்படுத்துகிறது.
2. பின் குதிங்கால் எலும்பில் ஏற்படும் அதீத வளர்ச்சியால் ஏற்படும் மாற்றமும் (Haglund Deformity) வலியைத் தூண்டும் காரணியாகிறது.
அடிப்பாத தசைகளில் ஏற்படும் பிரச்சனைகள்
1. அடிப்பாத தசையிலோ அல்லது கணுக்கால் மூட்டு சவ்விலோ (Bursa) ஏற்படும் நோய்த்தொற்று
2. தசைகளின் அதிகப்படியான வேலை
3. அடிப்பாத வளைவு (Arches of Root) சீர் இல்லாமை
மூட்டுகளினால் ஏற்படும் பிரச்சனைகள்
1. கீல்வாதம் மற்றும் பிற வாதங்கள்
வாழ்வியல் பிரச்சனைகள்
1. சரியான வகையிலான காலணிகளை அணியாமல் இருப்பது
2. குதி அதிக உயரம் உடைய காலணிகளை அணிவது (High Heels)
3. காலணியின் அடிப்பாகம் அதிக கடினமாக இருக்கும் வகையிலான, சீரான அடிப்பாகம் இல்லாத காலணிகளை அணிவது.
இவ்வாறாக மேற்கண்ட பிரச்சனைகளால் குதிங்கால் வலி வரக்கூடும்.
வலியை எப்படி தவிர்ப்பது?
1. குதிங்கால் வலி நமக்கு இருக்கிறதோ இல்லையோ, சரியான அளவிலான, பாத வடிவமைப்பு உடைய காலணிகளை அணிவதை வழக்கமாகக் கொள்ளவேண்டும்.
2. அதிக குதி உயரம் உள்ள காலணிகளை (High Heels) அணிவதைத் தவிர்ப்பது அதிமுக்கியமாகும்.
3. குழந்தைகளுக்கு பாதத்தின் வளைவு சீராக இல்லையென்றால், இயன்முறை மருத்துவரை அணுகி வளைவு சீராக்கும் சிகிச்சை/பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும் இயன்முறை மருத்துவரின் அறிவுரையின் பேரில் சரியான வளைவுகளை உண்டாக்கும் காலணிகளை பயன்படுத்த வேண்டும்.
உங்களுக்கு குதிங்கால் வலி வருகிறது என்றால் முதலில் உங்கள் நினைவுக்கு வரவேண்டியது, நீங்கள் அணியும் காலணிகளே.
அடிப்பாத தசைகளினால் ஏற்படும் பாதவலிக்கு தொடர் இயன்முறை மருத்துவப் பயிற்சியும், இயன்முறை மருத்துவ சிகிச்சையும் நிரந்தரத் தீர்வு தரும். குதிங்கால் வலி ஆரம்பிப்பதை நாம் உணர்ந்தவுடன், வலி உள்ள இடத்தில் பனிக்கட்டியைக் கொண்டு அழுத்தி வட்ட சுழற்சிமுறையில் 15 நிமிடம் தொடர்ந்து தேய்க்கவேண்டும். இதை ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை செய்யவேண்டும்.
நீண்ட நாள்களாக குதிங்கால் வலி இருப்போரும், அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டோரும், முதலில் பிசியோதெரபி எனப்படும் இயன்முறை மருத்துவ சிகிச்சை மூலம் வலியைக் குறைத்து, இயன்முறை மருத்துவப் பயிற்சிகள் மூலம் வலி வருவதைத் தடுக்க முடிகிறதா என்பதை உறுதி செய்துவிட்டு, அதன்பின் தேவைப்பட்டால் அறுவைசிகிச்சை பற்றி சிந்திக்கலாம். ஏனெனில், குதிங்கால் வலிக்காக செய்யப்படும் அறுவைச் சிகிச்சைகள் நூறு விழுக்காடு நிரந்தரத் தீர்வைத் தருவதில்லை என்று சில ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன.
விளையாட்டு வீரர்கள், அதிக உடற்பயிற்சி செய்வோர், நடைப்பயிற்சி மேற்கொள்வோர் என அனைவரும் ஓர் இயன்முறை மருத்துவரின் அறிவுரையைப் பெற்றுக்கொள்வது அவசியம். உடலில் ஏற்படும் எந்த வலியாக இருந்தாலும், அதைக் குறைக்க மற்றும் தவிர்க்க பல உடற்பயிற்சிகள் உள்ளன. ஆனால், அப்பயிற்சிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இல்லாமல், ஒவ்வொருவரின் உடல்வாகைப் பொறுத்து வேறுபடுகின்றன. எனவே, சரியான இயன்முறை மருத்துவரிடம் முறையான பயிற்சியும் சிகிச்சையும் பெற்றுக்கொள்தல் அவசியமாகிறது. அதன்மூலம் குதிங்கால் வலியினின்றும் குணமடையலாம்.
டாக்டர். சு. டேனியல் ராஜசுந்தரம்
தலைமை இயன்முறை மருத்துவர்
மயோபதி ஆராய்ச்சி மையம்
ஜீவன் அறக்கட்டளை