இன்றைய தலைமுறை பெண்கள் பலரும் எனக்கு பிசிஓடி பிரச்சனை இருக்கிறது என்று சர்வசாதாரணமாக சொல்கிறார்கள்; பிசிஓடி என்றால் என்ன? அதனால் என்ன மாதிரியான பிரச்சனைகள் உருவாகும் என்று டாக்டர் கிருத்திகா விளக்குகிறார்.
பிசிஓடி என்பது பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸ் என பொருள்படும். பெரும்பாலும் கருப்பையில் தான் உருவாகிறது. ஹார்மோன்களின் மாறுபாட்டாலும் உருவாகிறது. ஹார்மோன்களினால் தான் ஈர்ப்பு, பயம் உள்ளிட்ட பல்வேறு உணர்வுகள் நமக்கு ஏற்படுகின்றன. ஹார்மோன்களை செயற்கையாக உருவாக்க முடியாது. கருப்பை ஒவ்வொரு மாதமும் சினைக்குத் தயாராகும். நாம் பிறக்கும்போதே சிறிது சிறிதாக கருமுட்டைகள் நம்முள் உருவாகியிருக்கும். அவை தூண்டப்படும் போது ஒரு முட்டை உருவாகி, அது சினைக்குத் தயாராகி, கருப்பைக்குள் சென்று விந்துவுடன் இணையும். இதில் ஏதாவது ஒரு இடத்தில் சிக்கல் ஏற்படும்போது சினை முட்டைகளுக்குள் திரவம் சென்று சேர்ந்துவிடும். அதுதான் பிசிஓடி.
பிசிஓஸ் (பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்ட்ரம்) என்பது இந்த நோய் வருவதற்காக அறிகுறிகள் ஆகும். பிசிஓடி மற்றும் பிசிஓஎஸ் ஆகியவற்றுக்கான வித்தியாசத்தை மருத்துவ பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்க முடியும். அதே சமயம் இதை நாமே கண்டுபிடிக்கவும் முடியும். பெண்களுக்கு முகத்தில் அதிக அளவு முடி வளர ஆரம்பிப்பது இதற்கான ஒரு அறிகுறி. ஆண்களுக்கான ஹார்மோன்கள் பெண்ணுக்குள் வரும்போது இந்த மாற்றம் நிகழும். மாதவிடாய் என்பது சிலருக்கு ஒவ்வொரு மாதமும் 20 நாட்கள் இருக்கும், சிலருக்கு 10 நாட்கள் இருக்கும், சிலருக்கு உதிரப்போக்கு இருக்கும், சிலருக்கு அவ்வாறு இருக்காது. வழக்கமான முறையில் அல்லாமல் வேறு வகையில் மாதவிடாய் நிகழும். ஒவ்வொரு பெண்ணுக்கும் இது மாறுபடும்.
இன்சுலின் அளவுக்கு அதிகமாய் இருப்பதும் இதற்கான அறிகுறி. இந்த நோய்களுக்கான சிகிச்சையில் இன்சுலினை கட்டுப்படுத்துவதற்கான மாத்திரைகள் தரப்படும். ஹார்மோன் குறித்த இந்த பிசிஓடி மற்றும் பிசிஓஎஸ் பிரச்சனைகள் பெரும்பாலும் அதிக உடல் எடையால் தான் ஏற்படுகின்றன. சிலருக்கு மட்டுமே இதனால் உடல் எடை குறையும். பெரும்பாலானோருக்கு உடல் பருமனால் தான் இது ஏற்படுகிறது. இதனால் குழந்தை பிறப்பில் சிரமம் ஏற்படுவது மிகச் சிலருக்குத் தான். எல்லா பெண்களுக்கும் அப்படி ஏற்படுவதில்லை. உடல் எடையை கட்டுப்படுத்தி வைத்திருப்பது குழந்தை பிறப்பிற்கும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.