
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா?. ஏற்றால் தான் நிதி” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மும்மொழி கொள்கை விவகாரம் தமிழகத்தில் பேசுபொருளாகி இருக்கும் நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற 8 ஆம் ஆண்டு கட்சி தொடக்க விழா கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார். அவர் பேசுகையில், ''மக்கள் நீதி மய்யத்தின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கும். எந்த மொழி வேண்டும் எந்த மொழி வேண்டாம் என்பது தமிழனுக்கு தெரியும். ரசிகர்கள் வேறு வாக்காளர்கள் வேறு என்பதை எனது அனுபவத்தில் தெரிந்து கொண்டேன். 20 ஆண்டுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். அப்படியே முன்பே அரசியலுக்கு வந்திருந்தால் நாம் இன்று பேசியிருக்க வேண்டிய இடம் மாறி இருக்கும். வராதது என் தோல்விதான். இந்த ஆண்டு நமது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகிறது. நம்மை இணைப்பது தமிழ் மொழி தான். தன்னம்பிக்கையுடன் நாம் உயிர்த்திருக்க தமிழக மக்களே காரணம். மொழிக்காக உயிர் விட்டவர்கள் தமிழர்கள்.காந்தியைப் போன்று பெரியாரையும் எனக்கு பிடிக்கும். பெரியாரே காந்தியின் சிஷ்யன் தான்.
சட்டமன்றத்தில் நமது குரல் ஒலிக்கப் போகிறது. அதற்கு கட்டியம் கூறுவது தான் இந்த விழா. ஒவ்வொரு ஆண்டும் நாம் கொண்டாடிக் கொண்டே இருக்கலாம். ஆனால் இவையெல்லாம் முக்கியமான தருணங்கள், நாம் ஏறி வந்த படிக்கட்டுகள். மக்கள் நீதி மய்யத்தில் மாணவர்கள் இணைந்து கொண்டிருக்கிறார்கள். அதன் பொருள் என்ன? மாணவர்கள் நம்முடன் இணைந்து விட்டால் நான் சொன்ன 'நாளை நமதே' என்பதன் அர்த்தம் புரியும்'' என்றார்.