Published on 06/02/2019 | Edited on 06/02/2019
தலை உள்ளவர்களுக்கெல்லாம் தலைவலி நிச்சயம் இருக்கும். ஆனால் அது எதனால் வருகிறது என்று தெரியாமல் தவிப்பவர்கள், தலைவலிக்குத் தற்காலிக நிவாரணம் காண்பவர்கள் தான் அதிகமானவர் கள். சரி; உண்மை என்ன? தலைவலி ஒரு வியாதியா...? அல்லது பல்வேறு வியாதிகளின் வெளிப்பாடா...? என்ன தலையை வலிக்கிறதா...? இதோ பதிலைச் சொல்லிவிடுகிறேன்.
தலைவலி பின்வரும் காரணங்களால் வரலாம் :- 1. தீவிரமான மன உளைச்சலால் தலைவலி வரலாம். 2. பாக்கு, புகையிலை, போதை என்று மிதப்பவர்கள், காலையில் தலைவலியோடு தான் எழுந்திருக்க வேண்டும் என்பது இயற்கையின் நியதி. எனவே இவர்களுக்கும் தலைவலி வருகிறது. 3. இரத்தக் கொதிப்பு நோய்க்கு உட்பட்டவர்களுக்குத் தலைவலி வரலாம். 4. தீவிரமான சிந்தனை, எளிதில் உணர்ச்சிவசப்படும் தன்மை, உணவுப்பொருட்களின் ஒவ்வாமை இவற்றால் மைக்கிரேன் எனப்படும் தலைவலி வரலாம். 5. அதிக பசியா...? தலைவலி வரலாம். 6. மலச்சிக்கலா...? கண்டிப்பாய்த் தலைவலி வரும்.7. சிறுநீரகத்தில் கல், பித்தப்பையில் கல், அஜீரணக் கோளாறு இவற்றாலும் தலைவலி வருகிறது. 8. முறையாக மாதவிடாய் வராத பெண்களுக்குத் தலைவலி தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. 9. நரம்புவியாதிகளாலும் தலைவலி வரலாம்.10. காரணமே இல்லாமல்கூட தலைவலி வரலாம். நவீன மருத்துவத்தில் தலைவலிக்கான மாத்திரைகள் நிறைய உள்ளன.
அவற்றில் முக்கியமாய் ஆஸ்பிரின், பினாசெட்டின் போன்ற மருந்துகள் பரவலாய்ப் பயன்படுத்தப்படுகிறது. இவை தலைவலியை அப்போதைக்குக் கட்டுப்படுத்துமே ஒழிய, உடனே தீர்க்குமேயொழிய, தலைவலிக்கான மூல காரணத்திற்கு மருந்தாகாது. மாதவிடாய்க் கோளாறினால் வரும் தலைவலிக்கு ஆஸ்பிரின் மருந்தாகலாம். ஆனால் மாதவிடாய்க் கோளாறுக்கு ஆஸ்பிரின் மருந்தாகாது. தலையை வலிக்கிறது. ஒரு ஸ்ட்ராங்கான மாத்திரை கொடு... என்று மெடிக்கல் ஷாப்பில் கேட்கும் பழக்கத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். மருத்துவரின் சரியான ஆலோசனைக்குப் பிறகு அதற்கு ஏற்றார் போல் உணவு மற்றும் மருந்தைப் பயன் படுத்த வேண்டும்.