உணவே மருந்து ,உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் ,உடம்பே ஆலயம் என்றார்கள் ஞானியர். உலகத்தில் ஒப்புயர் வற்றது - போனால் திரும்பப் பெறவே முடியாதது உயிர். அந்த உயிர் வாழும் கூடு நம் உடல். அதைப் பேணிப் பாதுகாத்தல் வாழ்க்கையின் தலையாய கடமைகளில் ஒன்று. ஆனால் நாம் அதைச் செய்கிறோமோ என்றால், நூற்றுக்கு தொண்ணூற்றி ஐந்து சதவிகிதம் பேர் அதைப்பற்றி அக்கறையே கொள்வதில்லை. "நாலாயிரம் கோடி நார்பின்னிய கட்டில்' என்று மனித உடலை வர்ணிக்கிறார்கள் சித்தர்கள். நாமோ நாக்கு என்ற உறுப்புக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, ஊர்வன; பறப்பன என்று உடம்புக்கு ஒவ்வாத அத்தனையையும் உண்டு, உடலைப் புதைகுழியாக்கிக் கொண்டிருக்கிறோம். அதனால், மருத்துவமனை களும் மருந்துகளும் பெருகிப் போயிருக்கிறது. உண்ட உணவால்தான் உபாதை என்றால் அந்த உபாதையிலிருந்து விடுபடுவதற்காக உட்கொள்ளும் மருந்துகளின் பக்கவிளைவால் ஏற்படும் கேடு அதைவிடக் கொடியது.
சரி; இதற்கு என்னதான் தீர்வு?
இறைவன் நம்முள்ளேயே இருக்கிறான் என்பதுபோல், தீர்வு நம்மிடமே இருக்கிறது. ஆமாம்; உணவே மருந்து; மருந்தே உணவு.உணவு முறையை ஒழுங்குக்குள் கொண்டு வந்துவிட்டால், உடல் ஆரோக்கியம் தானே வந்துவிடும். அதற்கு முதலில் சமையலுக்குச் சலாம் சொல்ல வேண்டும்.இயற்கையான காய், கனி, கீரை வகைகளை உணவில் முக்கியமாக்கிக் கொள்ள வேண்டும். பூமிக்குக் கீழே உற்பத்தி ஆகிற கிழங்கு வகைகளுக்கு டாட்டா சொல்ல வேண்டும். கார்போ ஹைட்ரேட் நிறைந்த அரிசிப் பதார்த்தங்களுக்கு சல்யூட் அடித்து ஓரங்கட்டிவிட வேண்டும். ப்ரைட் ஐயிட்டங்களை அறவே ஒதுக்கிவிட்டால் உத்தமம்.இப்படித்தள்ள வேண்டிய பட்டியலைத் தயாரித்து விட்டால் உடம்பின் உபாதைகள் பாதி குறைந்துவிடும். வயிறு குப்பைக் குழியாவது தடுக்கப்பட்டுவிடும். அதற்கப்புறம் எவைஎவை தேவை என்று பார்த்து, அவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால், உடம்பு கோவிலாகவே மாறிவிடும்.இந்த மாற்றத்துக்கு முதல் தேவை, "மாற்றம் எனது மானிடத் தத்துவம்; மாறாதிருக்க நான் வனவிலங்கல்ல!' என்று கண்ணதாசன் கவிதை வரிகளை மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். என் ஆரோக்கியத்துக்காக என் பழக்கத்தை மாற்றுவேன் என உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்!
அடுத்து, இயற்கை மருத்துவம் என்றால் என்ன?
இது ஒரு மருந்தில்லா மருத்துவம். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூத தத்துவத்தின் அடிப்படையைக் கொண்டதும் கீரைகள், இலைகள், காய்கறிகள், பழவகைகள், முளையிட்ட தானிய வகைகள் ஆகியவற்றை மருந்தாகக் கொண்டதுமே.... இயற்கை மருத்தும்! அதாவது, "உணவே மருந்து, மருந்தே உணவு' இதுவே இயற்கை மருத்துவத் தத்துவம்.இயற்கை மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை எனலாம். இம்மருத்துவமுறை செலவில்லாதது. சிக்கனமானது. பக்க விளைவுகள் அற்றது. முற்றிலும் பாதுகாப்பானது. சமைத்த உணவில் 30 சதவிகிதம்தான் சத்தாக உடம்பில் ஒட்டுகிறது. ஆனால் இயற்கை உணவில் 90 சதவிகிதம் சத்தாகச் சேர்ந்துவிடுகிறது. புற்றுநோய் முதலாக, ஆஸ்துமா, சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், தொழுநோய், சிறுநீரகக் கோளாறுகள், காமாலை, சயரோகம், குடற்புண் இன்னும் எண்ணற்ற வியாதிகளைக் குணப்படுத்தும் அற்புத மருத்துவமே இயற்கை மருத்துவம். "இயற்கை உணவுகளே இயற்கை மருத்துவம்.'நன்கு பசிக்கிறது. சாப்பிடுகிறோம். மூன்று வேளையும் சாப்பிடுகிறோம். நமது பொருளாதார அமைப்பிற்கேற்றவாறு, உணவில் பல வகைகளைச் சமைத்து ருசியாய்ச் சாப்பிடுகிறோம்.நாம் உண்பது, உடலை வளர்க்கவும், உணர்ச்சிகளைத் தீர்த்துக்கொள்ளவும், இழந்த சக்தியை மீட்டுக் கொள்ளவும்தான். உடல் வளர்கிறது. வயது முதிர்கிறது. மூப்பு அடைகிறது. மரணம் வந்துவிடுகிறது.இந்த வளர்ச்சி, முதிர்ச்சி, மூப்பு, மரணம் இவற்றிற்கு நம் உணவால் என்ன பயன் என்று கண்டால் ஒன்றுமில்லை.பருவ வளர்ச்சியைக் கெடுத்து, அறிவு வளர்ச்சியைக் குறைத்து, மனதை அலைபாயவிட்டு, வாழ்வை நரகமாக்கும் வித்தையை நமது சுவையான உணவுகள் செய்துவிடுகின்றன.
சில பறவையினங்களும் மிருகங்களில் சிலவும், தாவர இலைகள், காய்கள், பழங்கள், கொட்டைகள், கிழங்குகள் ஆகியவற்றை மட்டுமே உணவாகக் கொள்கின்றன. அவைகளுக்குப் பிரசவ நோய், பிற நோய்கள் வருவதில்லை. அவைகளுக்குப் பற்கள் விழுவதில்லை. நரம்புத் தளர்ச்சி ஏற்படுவதில்லை. இனப்பெருக்கக் குறைபாடுகள் காணப்படுவதில்லை.மனிதனும் மிருகங்களோடு காடு, மலைகளில் காட்டு மிராண்டிகளாய்த் திரிந்தபோது உணவைப் பச்சையாகவே தின்று வந்தான். அப்பொழுது அவன் சிறந்த உடல் வளமும், நோயில்லா வாழ்வும் கொண்டிருந்தான். ஆனால் இன்றோ மனிதன் நோய்களின் கூடாரமாய்த் தன்னை மாற்றிக் கொண்டான். சமைத்த உணவைச் சாப்பிடும் மனிதனின் உடலிலிருந்து வெளியேறும் கழிவில் துர்வாசனை அடிக்கிறது. மனிதனின் முடி நரைக்கிறது. பற்கள் விழுந்துவிடுகிறது. மூக்குக் கண்ணாடி போட்டுக்கொள்ள நேரிடுகிறது. நோயின் இருப்பிடம் மனிதன் என்ற நிலைக்கு வந்துவிட்டான்.உப்பு, புளி, காரம், இனிப்பு - இந்த சுவைகளை மட்டுமே தலைமுறைக்கணக்கில் மனிதன் பழக்கப்படுத்திக்கொண்டான். அறுசுவையில் கசப்பு - துவர்ப்பு சுவையினை மனிதன் மறந்தேவிட்டான்.உப்பை அதிகம் ருசித்தால் இரத்த அழுத்தம்.புளிப்பை அதிகம் ருசித்தால் வாய்வு, பித்தநோய்கள்.காரம் அதிகம் ருசித்தால் வெட்டை நோய்.இனிப்பை அதிகம் ருசித்தால் சர்க்கரை நோய்.என நோய்கள் ருசியின் அடிப்படையில் வந்துவிடுகின்றன.எனவே, இன்றைய மனிதனுக்கு உணவுச் சீர்திருத்தம் உடனடித் தேவையாகும். அறுசுவை தரும் சரிவிகித இயற்கை உணவுகளே நோயின்றி வாழ எளிய வழியாகும்.நாம் எப்படிப் பட்ட உணவை எடுக்கிறமோ அப்படித் தான் நம்முடைய உடலும் அமைகிறது ஆகையால் நோய் நொடி இல்லாமல் வாழ சரியான உணவு வகைகளை எடுத்து கொள்ள வேண்டும் .