இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் பெரும்பாலான கிராமவாசிகள் மற்றும் நகர்ப்புறத்தைச்சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொது இடங்களில் சிறுநீர், மலம் கழிப்பது குறித்து எந்த விதமான வருத்தமும் இன்றியே இருந்தனர்.சுகாதாரம் மற்றும் நோய் பாதிப்பு தொடர்பான எந்த கவலையும் அவர்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. அதுமட்டும் இல்லாமல் தங்களது குழந்தைகளையும் சுகாதாரமற்ற சூழல் எனும் படுகுழியில் தள்ளி வந்தனர்.
ஆனால், இவையெல்லாம் கணிசமான அளவுக்கு மாறத் தொடங்கிவிட்டது. இதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்த உலகளாவிய சுகாதாரத்துடன் இணைந்த தூய்மை இந்தியா திட்டம் என்றால் அது மிகையில்லை. அதுவும் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினமான 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதிக்குள் தூய்மை இந்தியா திட்டத்துக்கு இலக்கும் நிர்ணயித்தார்.பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து மக்களால் பல நூற்றாண்டுகளாக கடைபிடித்து வரப்பட்ட பொது இடங்களில் மலம் கழிக்கும் பழக்கம் குறையத் தொடங்கிவிட்டது.இந்தியாவின் வளர்ச்சித் திட்டத்தில் உலகளாவிய சுகாதாரம் முக்கிய இடத்தில் உள்ளது. 2014-ஆம் ஆண்டு வரை 39 சதவீத மக்களுக்கே பாதுகாப்பான சுகாதார வசதிகள் கிடைத்து வந்தது.ஆனால், தூய்மை இந்தியா திட்டம் அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகள் முடிந்த நிலையில் நாட்டில் உள்ள 5 மாநிலங்கள், 200 தாலுகாக்கள், 2 லட்சத்து 40 ஆயிரம் கிராமங்கள் பொது இடங்களில் மலம் கழிப்பதில்லை என்று அறிவித்துள்ளன.இது தவிர ஒன்றரை லட்சம் கிராமங்கள் திட, திரவக் கழிவு மேலாண்மையை அடிப்படையாகக் கொண்டு கிராம சுகாதார திட்டத்தின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
சீரமைக்கப்பட்ட சுகாதாரத் திட்டத்தின் விளைவாக குடும்பங்களில் பணம் பெரும் அளவில் சேமிக்கப்படுகிறது. அதாவது சுகாதாரத்துக்காக ஒரு ரூபாய் செலவிடப்படும் போது 4 ரூபாய் 30 பைசா சேமிக்கப்படுகிறது. தூய்மை இந்தியா திட்டத்துக்கு செலவழிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மதிப்பீடு செய்த யூனிசெப் நிறுவனத்தின் ஆய்வின் மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளது. அதாவது சராசரியாக விகிதாச்சரப்படி இது 430 சதவீதம் ஆகும்.ஒரு புறம் அரசும், குடும்பங்களும் சுகாதாரத்துக்காக செலவழிக்கும் போது மறுபுறம் சீரமைக்கப்பட்ட சுகாதாரத்தின் மூலம் நிதி சேமிக்கப்படுகிறது என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஒரு குடும்பம் கழிப்பறைக்காக ஒரு தொகையை முதலீடு செய்யும் நிலையில் அந்தக் குடும்பத்துக்கு ஆண்டு தோறும் 50 ஆயிரம் ரூபாய் சேமிப்பு கிடைக்கிறது. மேலும் இறப்புகள் தவிர்க்கப்படுவதோடு நேர விரயமும் தடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.12 மாநிலங்களில் உள்ள 10 ஆயிரம் கிராம மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்விலிலிருந்து 85 சதவீத குடும்ப உறுப்பினர்கள் கழிப்பறையை பயன்படுத்தத் தொடங்கியுள்ளதும் அறியப்பட்டுள்ளது.1 லட்சத்து 40 ஆயிரம் குடும்பத்தினரிடம் இந்திய தரக் கவுன்சில் நடத்திய ஆய்வில், 91 சதவீத மக்கள் கழிப்பறையை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது என்று சுகாதார மற்றும் நீர் மேலாண்மை அமைச்சகம் தெரிவித்தது.
பாதுகாப்பான, அருகில் உள்ள கழிப்பறைகள் கிராம மக்களின் மனத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இது நாள் வரை மன அழுத்தத்துடன் இருளான பொது இடத்தை நாடிச் செல்ல வேண்டிய நிலையில் இருந்த பெண்களிடம் பெரிய நிம்மதியைத் தேடித் தந்துள்ளது. தற்போது அவர்கள் பாதுகாப்போடு, தன்மானத்தையும் பெற்றுள்ளனர்.முறையான சுகாதாரத் திட்டத்துக்காக இந்தியா ஒவ்வொரு ஆண்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீத்தை செலவு செய்ய வேண்டியிருக்கும். கழிப்பறை வசதிகள் இல்லாத நிலையில் மிகவும் கேடான சுகாதாரச் சூழலால் விபரீதமான விளைவுகள் ஏற்படும் என்றும் அந்த ஆய்வின் மூலம் அறிய வந்துள்ளது.சுகாதாரமற்ற சூழல் காரணத்தால் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு ஒரு லட்சம் குழந்தைகள் இறக்க நேரிடுவதாகவும், இந்தியாவில் உள்ள 40 சதவீத குழந்தைகள் உடல், மன வளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.தற்போதைய நிலையில் அரசு எதிர் கொண்டிருக்கும் முக்கியமான சவால் என்னவென்றால் கழிப்பறைகள் கட்டுவதைவிட மக்களின் மனப் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதேயாகும். அதுவும் கிராமப்புற மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் மிகப்பெரிய சவாலாக உள்ளது.பல நூற்றாண்டுகளாக அவர்களின் மனத்தில் வேரூன்றியிருக்கும் பொது இடங்களில் மலம் கழிக்கும் பழக்கத்தை மாற்றமுற்படுவதோடு சுகாதாரம் தொடர்பாக அவர்களுக்கு எடுத்துரைக்கவும் வேண்டும். பல்வேறு முறையிலான உத்திகளோடு அவர்களை அணுகி சுகாதாரம் பற்றி எடுத்துரைத்து நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். அதுதான் தூய்மை இந்தியாவின் அடிப்படை நோக்கமாகும்.
நூற்றுக்கணக்கான ஏன் ஆயிரக்கணக்கான கழிப்பறைகளைக் கட்டினாலும் மக்களின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்துவதே முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று யூனிசெப் இந்தியாவின் தலைவர் (நீர், சுத்தம், சுகாதாரம்) நிகோலஸ் ஓஸ்பெர்ட் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.தூய்மை இந்தியா திட்டத்தை மக்களிடம் முன்னெடுத்தும் செல்லும் நோக்கத்தில் 15 நாள் முகாமை மத்திய அரசு செயல்படுத்திவருகிறது. இதையொட்டி தூய்மையே சேவை என்ற நோக்கில் ரயில் நிலையங்கள், திரையரங்குகள், பேருந்து நிலையங்களில் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுத்து செல்லும் அதே நேரத்தில் கழிவுகளும் கசடுகளும் ஆற்றிலோ அல்லது நிலத்திலோ கொட்டப்படாமல் இருப்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 1.7 மில்லியன் டன் கழிவுகள் ஏற்படுகிறது. இவற்றில் 78 சதவீதம் நீராகும். இவை ஆற்றிலும், ஏரிகளிலும் தான் கொட்டப்படுகின்றன. இதன் காரணத்தால் பல்வேறு நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.இந்த நிலையில் வறண்ட, மலை, குக்கிராமங்களில் மிகவும் குறைந்த விலையில் கழிப்பறைகளைக் கட்டுவதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை அளிக்க இளைஞர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும். மரபு சாரா கழிவறைகளை அமைப்பதற்கு அவர்களது ஆலோசனைகளை நாட வேண்டியதும் அவசியமாகும்.முதற்கட்டமாக துரித கதியில் 12 மில்லிலியன் கழிப்பறைகளை கட்ட வேண்டும். அதற்கு முன் மக்களின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை பிரதமரோ, முதல் அமைச்சர்களோ, ஆட்சியர்களோ அல்லதுநாடாளுமன்ற உறுப்பினர்களோ ஏற்படுத்த வேண்டும். அத்தோடு தெருமுனை நாடகங்கள் மூலம் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.அது மட்டும் அல்லாமல் ஊடகங்கள் மற்றும் பிரபலங்கள் மூலமாகவும் பொது இடங்களில் மலம் கழிப்பதால் உண்டாகும் தீமைகுறித்து விழிப்புணர்வை உண்டாக்க வேண்டியது அவசியமாகும்.