ilaiyaraja about bavatharini

பிரபல பாடகியும் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த ஆண்டு இதே நாள்(25.01.2024) புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். கடந்த 1984 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மை டியர் குட்டிச்சாத்தான் என்ற திரைப்படம் மூலம் பாடகியாக அறிமுகமான பவதாரிணி தமிழ் சினிமாவில் பல சிறப்பான பாடல்களை பாடியுள்ளார். மேலும் இசையமைப்பாளராகவும் 10 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவரது மறைவு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisment

இதையடுத்து பவதாரிணியின் குரல் கடந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் யுவன் இசையில் வெளியான கோட் படத்தில் ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலில் பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில் பவதாரணி மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுவதை ஒட்டி இளையராஜா மகள் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Advertisment

அந்த வீடியோவில் பவதாரிணியுடன் இளையராஜா இருக்க பின்னணியில் இளையராஜா பேசுகிறார். அவர் பேசியதாவது, “என் அருமை மகள் பவதா, இன்று எங்களை விட்டு பிரிந்த நாள். அன்பே உருவான இந்த மகள் பிரிந்த பின்னால்தான் அந்தக் குழந்தை எவ்வளவு அன்பு மையமாக இருந்திருக்கிறாள் என்பது எனக்குப் புரிந்தது. காரணம், என்னுடைய கவனமெல்லாம் இசையிலேயே இருந்ததால் குழந்தைகளைக் நான் கவனிக்காமல் விட்டது இப்போது வேதனையைத் தருகிறது. அந்த வேதனையெல்லாம் மக்களை ஆறுதல்படுத்தும் இசையாக இருக்கிறது. இதை நினைக்கும் பொழுது கொஞ்சம் என் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது” என உருக்கமுடன் பேசியுள்ளார். மேலும் அந்த வீடியோவில் பவதாரிணியின் பிறந்தநாளான பிப்ரவரி 12 ஆம் தேதி அவரின் திதியும் வருவதாகவும் அன்று நினைவு நாள் நிகழ்ச்சியாக நடத்தலாம் என்றும் அன்று அனைத்து இசைக்கலைஞர்களும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.