Skip to main content

"அவர் எவ்வளவு பெரியவர்... என் வீட்டில் காத்திருக்கச் செய்திருப்பது நியாயமா?" - அறிஞர் அண்ணா 

Published on 10/04/2019 | Edited on 15/09/2019

தமிழகத்தை ஆண்ட அண்ணாத்துரை, திராவிடத்தின் முக்கிய அடையாளமாக என்றும் விளங்கும் அண்ணா, இப்போதும் எப்போதும் அறியப்படுவது ’அறிஞர் அண்ணா’வாகத்தான். அப்பேர்ப்பட்ட அறிஞர் அண்ணா, தான் வளர்ந்த பிறகும் தனது ஆசிரியரின் மேல் வைத்திருந்த மரியாதைக்கு உதாரணமாக ஒரு சம்பவம் இங்கே...

அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, காஞ்சிபுரம் போகிறார். அவர் படித்த பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா ஏற்பாடு செய்துள்ளார்கள். அதற்குத் தலைமையேற்க அண்ணாவின் தமிழாசிரியர் திருநாவுக்கரசு என்ற புலவரை வேண்டி இசைவு பெற்றிருந்தார்கள். காஞ்சியில் தன் வீட்டில் அண்ணா குளித்துவிட்டுக் குளியலறையிலிருந்து வெளியில் வருகிறார். பார்த்தால், வயது முதிர்ந்த திருநாவுக்கரசு ஐயாவை அழைத்து வந்து உட்கார வைத்திருக்கிறார்கள்.

 

anna



நண்பர்களிடம் அண்ணா கூறினார், "அவர் எவ்வளவு பெரியவர், எனக்குத் தமிழ் கற்பித்த ஆசிரியர், அவரை அழைத்துவந்து என் வீட்டில் காத்திருக்கச் செய்திருப்பது நியாயமா? அவரை அவர் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள். நாம் அவர் வீட்டுக்குச் சென்று அவரை அழைத்துப் போகவேண்டும். அவர் வீட்டுக்கு முதலிலில் அவரை அழைத்துச் செல்லுங்கள்.' அதன்படியே புலவரை, அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். பழங்கள் கொண்டுபோய் ஆசிரியருக்குக் காணிக்கையாகத் தந்து அவரை வணங்கினார் அண்ணா.

"தாங்கள் தந்த தமிழ்தான் என்னை வாழவைக்கிறது' என்று போற்றிப் புகழ்ந்து, தன் காரிலேயே அவரை விழாவுக்கு அழைத்துச் சென்றார். அண்ணா முதலமைச்சராக ஆனபோதும் ஆசிரியரை வணங்கி வாழ்த்துப் பெற்றார். ஆசிரியப் பதவி அந்த அளவுக்கு மேன்மையானது.


திருவாரூர் இரெ. சண்முகவடிவேல்