கொத்தமல்லியின் சிறப்புகள் குறித்து ஆயுர்வேத மருத்துவர் சுகந்தன் விளக்குகிறார்
கொத்தமல்லியில் அனைத்து வகையான ஊட்டச்சத்துகளும் இருக்கின்றன. நமக்குத் தேவையான வைட்டமின்கள் அதில் அடங்கியிருக்கின்றன. அலங்காரத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவது கொத்தமல்லி என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது பல்வேறு உடல் பாதிப்புகளை சரிசெய்ய வல்லது. கல்லீரல் பாதிப்பு இருப்பவர்கள் கொத்தமல்லி சாப்பிடுவது நல்லது. கொத்தமல்லியில் வேரை எடுத்துவிட்டு, தண்ணீர் சேர்த்து ஜூஸாகவும் குடிக்கலாம். இதில் உப்பு சேர்க்க வேண்டிய அவசியமில்லை.
உப்புக்கு பதிலாக இதில் நெல்லிக்காய் சேர்த்துக்கொள்ளலாம். நெல்லிக்காயில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் கொத்தமல்லியிலும் இருக்கிறது என்பதை கொரோனா காலத்தில் நாங்கள் செய்த ஆராய்ச்சியின் மூலம் அறிந்தோம். கொத்தமல்லிச் சாறுடன் மிளகு சீரகம் சேர்த்து பருகும்போது உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். இதன் மூலம் சைனஸ் பிரச்சனையும் தீரும். டயாலிசிஸ் சிகிச்சையில் இருப்பவர்கள் கூட கொத்தமல்லியை எடுத்துக் கொள்ளலாம். அல்சர் நோயை இது குணப்படுத்தும்.
சிறுநீரகப் பிரச்சனை இருப்பவர்கள் கொத்தமல்லியுடன் உப்பு சேர்த்து பருக வேண்டாம். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் கொத்தமல்லி சாப்பிட வேண்டும். கொத்தமல்லியுடன் நெல்லிக்காய், மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடும்போது சர்க்கரையின் அளவு குறையும். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களும் இதை சாப்பிடலாம். தினமும் காலையில் கொத்தமல்லி ஜூஸ் குடித்துவிட்டு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். இதனால் ரத்த அழுத்தம் குறையும்.
பல்வேறு வகையான காய்ச்சல்கள் நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. அதற்குக் காரணம் உடலில் இருக்கும் உஷ்ணம் தான். கொத்தமல்லி உஷ்ணத்தை தணிக்கக் கூடியது. சிறுநீர் வெளியேறுவதில் உள்ள பிரச்சனைகளும் இதன் மூலம் தீரும். உணவில் பெரும்பாலும் கொத்தமல்லியை நாம் ஒதுக்குகிறோம். இனி முக்கியமான ஒரு உணவாக கொத்தமல்லியை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யும் பேராற்றல் கொத்தமல்லிக்கு இருக்கிறது.