சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வந்தது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு அமலில் இருந்தும் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகின்றது. இதனை குறைக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில் இந்த கரோனா பயத்தின் காரணமாக உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றது. கேரளா மாநிலம் தலைச்சேரியை சேர்ந்தவர் மகேஷ். கர்த்தாரில் வேலை செய்து வந்த அவர் தமிழகம் வந்து பழனியில் அறை எடுத்து தங்கியுள்ளார். தனக்கு கரோனா பாதிப்பு இருக்குமோ என்று அஞ்சிய அவர், சில தினங்களுக்கு முன்பு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
அதே போன்று கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவரும் தனக்கு கரோனா தொற்று இருக்குமோ என்று பயந்து, தன்னுடைய நண்பர்களிடம் அதனை தெரிவித்து வந்த அவர், தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதே போன்று வெளிநாடு சென்று வந்ததால் தமிழத்தில் தனிமையில் இருந்த வாலிபர் ஒருவரும் தற்கொலை செய்துள்ளார். கரோனா வைரஸால் ஏற்படும் உயிரிழப்புக்கள் ஒருபுறம் என்றால், தனிமையாலும், அதுகுறித்தான பயத்தாலும் உயிரிழப்புகள் தொடர்ந்து நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனித்திருப்பது என்பது நோய் குறித்து நாம் விழித்திருப்பது தான் என்பதை உணராமல், இந்த மாதிரியான தற்கொலைகள் நிகழ்வது கவலை தருவதாக மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.