மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'தமிழும் சமயமும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்தவகையில், நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள அசலதீபேஸ்வரர் கோவில் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
சமயம் தமிழை அலங்கரித்ததும் சமயத்தை தமிழ் அலங்கரித்ததும் தமிழின் தித்திப்பான வரலாறு. குறிப்பாக நாலாயிர திவ்ய பிரபந்தங்களும் பன்னிரு திருமுறைகளும் தமிழின் வளத்தை, மேன்மையை, அழகை தமிழர்களுக்குச் சொல்லித்தந்தன. சமய இலக்கியங்களை சாகா வரம் பெற்ற இலக்கியங்களாக நாம் படித்துக்கொண்டிருக்கிறோம். அதிலும், திருமுறைகளைப் படிக்கிறபோது உள்ளம் குளிர்ந்துவிடுகிறது.
திருமுறைகளை வாசிக்கும்போதும், அந்தத் திருமுறை தலங்களுக்குப் பின்னால் உள்ள வரலாற்றைத் தெரிந்துகொள்ளும்போதும் ஏதோ ஒரு புதிய உலகத்திற்குள் செல்வது போன்ற பூரிப்பு வருகிறது. இன்றைய நாமக்கல் மாவட்டத்தில் காவிரிக்கரையோரம் மோகனூர் என்ற ஊர் அமைந்துள்ளது. அதே ஊரில் அசலதீபேஸ்வரர் கோவில் என்றொரு சிவ திருத்தலம் உள்ளது. வடகிழக்கு பருவமழை அதிகமாகப் பெய்து காவிரி ஆற்றில் வெள்ளம் வந்தபோது அந்தச் சிறிய கோவில் நீரில் மூழ்கிவிடுகிறது. இடி, மின்னல் மற்றும் பலத்தக் காற்றுடன் கூடிய மழை தொடர்ந்து பெய்தது. யாரும் கோவிலுக்கும் வந்து தரிசிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. சில நாட்கள் கழித்து தண்ணீர் மெல்ல வடிகிறது. இனி கோவிலுக்குள் சென்று தரிசிக்கலாம் என்ற நிலை வந்தவுடன் ஒரு பக்தன் கோவிலுக்குள் செல்கிறான். அந்தக் கோவிலில் வழக்கமாக எரியும் தீபம் அப்போதும் எரிந்துகொண்டிருக்கிறது. சூறாவளியும் புயலும் வீசியதற்குப் பிறகும், மழை அடாது பெய்த பிறகும், கோவிலே நீருக்குள் மூழ்கிய பிறகும் அந்தத் தீபம் எரிந்துகொண்டிருந்தது. அந்தத் தீபத்திற்கு அசலதீபம் என்று பெயர். அசலதீபம் என்றால் உண்மையான தீபம் என்று பொருள். எத்தனை இடர் நேரினும் அந்தத் தீபம் தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கும். அதனால்தான் அந்த சிவ திருத்தலத்திற்கு அசலதீபேஸ்வரர் கோவில் என்று பெயர் வந்தது. இதை ஆண்டவனின் மகிமை என்று நினைப்பதா... சிவனின் சித்தம் என்று நினைப்பதா அல்லது தமிழர்களின் சிற்பக்கலை திறனுக்கு இந்தத் திருக்கோவில் சான்று என்று சொல்வதா? புயல், மழை என இயற்கை பேரிடர்களைத் தாண்டி தீபம் எரிந்துகொண்டிருக்க காரணம், கோவில் அந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுதான். பக்தர்கள் இந்தக் கோவிலை இன்றைக்கும் வியந்து பார்க்கிறார்கள். அசலதீபேஸ்வரரை நாடிவரும் மக்கள், தங்கள் கவலைகளையும் குறைகளையும் அவரிடம் சொல்கின்றனர்.
அசலதீபேஸ்வர் கோவிலுக்குச் சென்று அந்தத் தீபத்தைக் கண்டு வணங்கினால் நம்முடைய குறைகள் அனைத்தும் நீங்கிவிடும் என்ற நம்பிக்கை நேற்றும் இருந்தது; இன்றும் உள்ளது. ஆகவே, ஒவ்வொரு திருக்கோவில்களுக்குப் பின்னாலும் ஒரு மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. அந்த வரலாற்றிற்குப் பின்னால் பல செய்திகள் உள்ளன. தமிழ்நாட்டு மக்கள் கோவில்களைக் கோவிலாக மட்டும் பார்க்கவில்லை. நம்முடைய பண்பாட்டு அடையாளங்களின் மிச்சமாகத்தான் அவற்றைப் பார்த்தார்கள். காவிரி எங்கெல்லாம் பெருக்கெடுத்து பாய்ந்ததோ, அந்தக் காவிரி கரை ஓரங்களிலெல்லாம் பாடல் பெற்ற திருத்தலங்கள் இன்றைக்கு இருப்பதைப் பார்க்க முடிகிறது. வடகரை, தென்கரை என காவிரி ஓடிய இரண்டு கரைகளிலும் சிவனுக்கு திருக்கோவில்கள் இருந்தன. அங்கு சமயக்குறவர்கள் வந்து பாடினார்கள். அந்தத் தலங்களைப் பாடல் பெற்ற திருத்தலங்கள் என்ற வரிசையில் வைத்து இன்றைக்கும் தமிழ் இலக்கியம் போற்றுகிறது.
தமிழர்களின் சிற்பக்கலைக்கும் சிவன் என்ற பரம்பொருளின் ஆற்றலுக்கும் அசலதீபேஸ்வர் கோவில் இன்று சான்றாக உள்ளது. எப்போதும் தரிசிக்கலாம், முப்பொழுதும் தரிசிக்கலாம் என்கிற அளவிற்கு காவிரிக் கரையோரம் முழுவதும் அன்றைக்கு சிவ சந்நிதிகள் எழுந்தன. அதற்குப் பிறகு கலை எழுந்தது. அதனைத் தொடர்ந்து, இசை, காவியம் எழுந்தன. இந்த வரலாற்றைத் தெரிந்துகொள்வதில் எவ்வளவு சுவாரசியம் உள்ளது என்பதை நினைத்தால் நெஞ்சம் நெகிழ்கிறது.