Skip to main content

மூன்று மத நம்பிக்கையாளர்களின் புனித நகரம் ஜெருசலேம்! - புனிதப்பயண நிதியுதவியை உயர்த்திய தமிழ்நாடு அரசு!

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

Jerusalem is the holy city of three religious believers! - Government of Tamil Nadu raises pilgrimage funding!

 

பொருள் சார்ந்த உலகப்பற்றை ‘லௌகீகம்’ என்கிறார்கள். பெரும்பாலோர் வாழ்ந்துவருவது, லௌகீக வாழ்க்கைதான்! குடும்பமோ, தொழில் சார்ந்ததோ, தங்களின் லௌகீக கடமைகளை அனைவரும் ஆற்றிவருகின்றனர். அதே நேரத்தில், என்னதான் லௌகீக வாழ்க்கை வாழ்ந்தாலும், அவரவர் மதம், சமயம், மார்க்கம் சார்ந்த ஆன்மிக ஈடுபாட்டையும் வெளிப்படுத்தியே வருகின்றனர்.

 

பிற நம்பிக்கையாளர்களைப் போலவே, கிறித்தவர்களும் புனிதப்பயணம் மேற்கொண்டுவருகின்றனர். அது என்ன புனிதப்பயணம்? ஜெருசலேம் நகரில் பெத்லகேம் என்ற இடத்தில் மாட்டுத் தொழுவில் இயேசு கிறிஸ்து பிறந்தார். இயேசு என்பதற்கு ரட்சகர், விடுவிப்பவர், காப்பாற்றுபவர், அதிசயமானவர், ஆலோசனைக் கடவுள், வல்லமை பொருந்திய தேவன், நித்திய பிதா, சமாதான பிரபு என்பது பொருளாகும். கிறிஸ்து என்றால், எதிர்வரும் காரியங்களை முன்னுரைக்கும் தீர்க்கதரிசி என்பதே அர்த்தமாகும். 

 

இயேசு பிறந்த இடத்தில் 1982இல் ‘சர்ச் ஆஃப் நேட்டிவிட்டி’ என்ற பெயரில் ஒரு தேவாலயம் எழுப்பப்பட்டது. இயேசு கிறிஸ்து மீது பற்றுள்ளவர்கள், தங்களின் வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த தேவாலயத்தைக் காண்பதற்கு, ஜெருசலேமுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்வர்.

 

ஆபிரகாமிய சமயங்கள் என்றழைக்கப்படும் யூத மதம், கிறித்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய மூன்றின் புனிதநகரமாக ‘ஜெருசலேம்’ கருதப்படுகிறது. உலகின் பழம்பெரும் நகரங்களுள் ஒன்றான ஜெருசலேமுக்கு நீண்டகால வரலாறு உண்டு. இரண்டு தடவை தரைமட்டமாக்கப்பட்டும், 23 தடவை முற்றுகையிடப்பட்டும், 53 தடவை தாக்கப்பட்டும், 44 தடவை கைப்பற்றப்பட்ட நகரம் ஜெருசலேம். இஸ்லாமியர் மற்றும் யூதர் அல்லாதவர்களுக்கும் ஜெருசலேமின் வரலாறு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஏனென்றால், தங்களது முன்னோர் ஜெருசலேமில் வாழ்ந்ததாக அவர்கள் கருதுகின்றனர்.

 

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்தது ஜெருசலேமில்தான். அங்கே, இயேசு கிறிஸ்துவின் கல்லறை புனித செபுல்கர் தேவாலயத்துக்குள் உள்ளது. உலகம் முழுவதுமுள்ள மில்லியன் கணக்கான கிறிஸ்தவர்களின், மத நம்பிக்கையின் முக்கிய மையமாக ஜெருசலேம் திகழ்கிறது. அதனாலேயே, கிறிஸ்தவர்கள் அனேகர் இயேசுவின் கல்லறைக்கு வந்து பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர். 

 

ஜெருசலேமில் 150க்கும் மேற்பட்ட தேவாலயங்களும், 70க்கும் மேற்பட்ட மசூதிகளும் உள்ளன. இங்கே, இஸ்ரேல் அருங்காட்சியகம், யாத் பாசிம், நோபல் சரணாலயம், குவாவத் அல் சாகரா, முசலா மர்வான், சாலமன் டெம்பிள், மேற்கு சுவர், டெபிட்ஸ் டோம் போன்றவை அவசியம் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களாக இருக்கின்றன.  

 

இஸ்லாமியர்களும் மெக்கா, மதீனா ஆகிய நகரங்களுக்கு அடுத்ததாக, ஜெருசலேமை புனித நகராகக் கருதுகின்றனர். முகமது நபி அவர்கள், ஜெருசலேமிலிருந்து விண்ணகப்பயணம் சென்று திரும்பினார் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கையாகும்.

 

புதிய ஏற்பாட்டின்படி, சுமார் கி.பி.30இல் இயேசு கிறிஸ்து ஜெருசலேமுக்கு வெளியே சிலுவையில் அறையப்பட்டு இறந்தார். அவர் உயிர்நீத்த சிலுவையை, கான்ஸ்டன்டைன் மன்னனின் தாய் புனித ஹெலென், கி.பி. 300 அளவில் ஜெருசலேமில் கண்டெடுத்துள்ளார். அதனாலேயே, கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம் புனித நகரம் ஆனது. 

 

ஜெருசலேமிற்கு புனிதப்பயணம் மேற்கொள்ளும் அருட்சகோதரர்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டுவருகிறது. 2020க்கு முன் ரூ. 20 ஆயிரமாக அளிக்கப்பட்டுவந்த நிதியுதவி, 2020 - 21இல் ரூ. 37 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. தற்போது, அந்நிதியுதவி சிறுபான்மை நலத்துறையால் ரூ. 60 ஆயிரமாக உயர்த்தப்பட்டு, தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்