Skip to main content

ஃபெஞ்சல் புயல்; வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் முக்கிய தகவல்!

Published on 01/12/2024 | Edited on 01/12/2024
Director of Met Center Balachandran important information about Fengal Storm 

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி அருகே நேற்று (30.11.2024) இரவு முழுமையாக கரையைக் கடந்தது. இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் குறித்து இன்று (01.12.2024) காலை 7 மணி நிலவரப்படி இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், “ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகில் நேற்று மாலை 5 மணி அளவில் கரையைக் கடக்கத் துவங்கியது. நேற்று இரவு 10.30 மணிக்கும் 11.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடந்துள்ளது.

இது புதுச்சேரிக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்தது. சுமார் 3 மணி நேரத்தில் பெரும்பாலும் நகராமல் உள்ளது. தற்போதைய நிலவரப்படி இது தொடர்ந்து மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக் குறையக் கூடும். இதுவரை பதிவான தகவலின் அடிப்படையில் கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் அதிக கனமழையும், 6  இடங்களில் மிகக் கனமழையும், 20 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 50 சென்டிமீட்டர் மழையும், புதுச்சேரியில் 46 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதுவே இதுவரை பதிவான மழையின் அளவுகளின் தரவுகளின் அடிப்படையில் அதிகபட்சமாகும். இதற்கு முன்னர்  2004ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி  21 சென்டிமீட்டர் மழை  புதுவையில் பதிவாகியிருந்தது. தற்போது 46 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வானிலை எச்சரிக்கையைப் பொறுத்தவரையில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட  எச்சரிக்கை தொடர்கிறது. புயல் குறித்துத் தொடர்ந்து கண்காணித்து தகவல் தெரிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்