அமெரிக்காவில் கடந்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை வீழ்த்தி ஜோ பைடன் அமெரிக்காவின் அதிபராக தேர்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஜோ பைடன், கடந்த ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கையில், ரஷ்ய அதிபர் புதின், ஜோ பைடனை தோற்கடிக்கும் விதமாக ட்ரம்பை ஜெயிக்க வைக்க முயன்றதாக கூறப்பட்டிருந்தது.
இந்தநிலையில், ஊடகம் ஒன்றிற்குப் பேட்டி அளித்த ஜோ பைடனிடம், இதுகுறித்து கேள்வியெழுப்பபட்டது. அதற்குப் பதிலளித்த ஜோ பைடன், “அதற்கான விலையை அவர் (புதின்) கொடுப்பார்” என தெரிவித்தார். மேலும், “எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கும், பிற அரசியல் எதிரிகளுக்கும் விஷம் தர உத்தரவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள புதினை நீங்கள் கொலைகாரன் என நினைக்கிறீர்களா?” என்ற கேள்விக்கு, “நான் அப்படித்தான் நினைக்கிறேன்” என பதிலளித்தார்.
அதே நேரத்தில் நவல்னிக்கு விஷம் தரப்பட்டதற்குத் தண்டனையாக ரஷ்யா மீது விதிக்கப்பட்ட ஏற்றுமதி கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குவதாக அமெரிக்க வர்த்தகத் துறை அறிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா, அமெரிக்காவுடனான உறவு குறித்து விவாதிக்க, தனது அமெரிக்க தூதரை தலைநகர் மாஸ்கோவிற்குத் திரும்ப அழைத்தது.
இந்தநிலையில், ஜோ பைடன் பேசியதற்கு ரஷ்ய அதிபர் புதின் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர், “எப்போதும் நாம், இன்னொரு நபரிடம் நமது சொந்த குணத்தைப் பார்த்துவிட்டு, அவரும் நம்மை போன்றவர் என நினைக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய புதின், “அமெரிக்க அதிபரின் வேண்டுகோளின்பேரில் அவருடன் முன்பு தொலைபேசியில் விவாதித்தேன். எங்களது விவாதத்தை தொடரும் வாய்ப்பை ஒரு நிபந்தனையோடு பைடனுக்கு தருகிறேன். இணையவழியாக நேரலையில் விவாதம் நடக்க வேண்டும். அதுவும் எந்த தாமதமும் இல்லாமல் நேரடியான விவாதமாக இருக்க வேண்டும்,” என தெரிவித்தார். மேலும் அவர் இருநாட்டு உறவுகள் குறித்தும் பைடனோடு விவாதிக்கத் தயாரென்றும், அது இருநாட்டு மக்களுக்கும் சுவாரசியமாக இருக்குமெனவும் தெரிவித்துள்ளார்.