கடந்த ஜனவரி மாதம், லட்சத்தீவு சென்றிருந்த பிரதமர் மோடி, ஆழ்கடல் பகுதியில் நீந்தி பவளப் பாறைகளைப் படம் பிடித்த காட்சிகள் வெளியாகி இருந்தது. அதேபோல் கடற்கரை பகுதியில் அமர்ந்து சிந்திப்பதை போன்ற புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பாஜகவினரால் 'ட்ரெண்ட்' செய்யப்பட்டது. அதே நேரம் பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது. இதனைத் தொடர்ந்து மாலத்தீவு அமைச்சர்கள் இருவரும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் இந்தியா குறித்து அவதூறு கருத்துகளைப் பதிவு செய்தனர்.
இந்த கருத்துகள் பல்வேறு விமர்சனங்களைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, ‘மூன்று அமைச்சர்களின் கருத்துக்கும் மாலத்தீவு அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவிப்போர் மீது அரசுத் தரப்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என மாலத்தீவு அரசு விளக்கம் அளித்தது. இதைத் தொடர்ந்து, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கடந்த 7 ஆம் தேதி 3 அமைச்சர்களையும் தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையான நிலையில், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மாலத்தீவுக்கான சுற்றுலா திட்டத்தை ரத்து செய்துவிட்டதாகவும் கூறப்பட்டது. அந்த சமயத்தில், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களுக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது இந்தியாவிற்கு வருகை தந்துள்ள மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இந்திய மக்களின் புறக்கணிப்பு மாலத்தீவை மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. நடந்த நிகழ்வுகளுக்காக மாலத்தீவு மக்கள் மன்னிப்பு கேட்க விரும்புகிறார்கள் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய மக்கள் சுற்றுலாவுக்காக மாலத்தீவுக்கு வர வேண்டும்” என்று கூறினார்.