ரஷ்யாவில் அதிபர் புதின் அரசின் மீது எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தார். 47 வயதாகும் அலெக்ஸி நவல்னி எதிர்கால ரஷ்யா என்ற புதிய கட்சியை தொடங்கி புதினைத் தொடர்ந்து விமர்சனம் செய்தும், ரஷ்ய மாகாணங்களில் நடைபெறும் ஊழல் குறித்தும் தன்னுடைய இணையப் பக்கத்தில் எழுதி வந்தார். இதனால் ரஷ்ய மக்களிடையே பிரபலமானார். கடந்த அதிபர் தேர்தலில் புதினுக்கு எதிராக அலெக்ஸி நவல்னி போட்டியிட முடிவு செய்துள்ளார். ஆனால் புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் தேர்தலின் போது புதினுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.
இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும் போது அலெக்ஸி நவல்னி மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அலெக்ஸி நவல்னிக்கு விஷம் வைக்கப்பட்டிருந்தை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதனை ஜெர்மனிய அரசு உறுதி செய்ததோடு, விஷம் வைக்கப்பட்டதில் ரஷ்ய அரசுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக ரஷ்ய அரசு மறுத்தது.
இதனைத் தொடர்ந்து 5 மாத சிகிச்சைக்குப் பிறகு ரஷ்யா திரும்பிய அலெக்ஸி நவல்னி, அறக்கட்டளை மூலமாக பணத்தை கையாடல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அலெக்ஸி நவல்னிக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கி அவற்றிற்கு நிதியுதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு மேலும் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ரஷ்யாவில் உள்ள ஆர்க்டி சிறையில் அடைக்கப்பட்ட்டிருந்த அலெக்ஸி நவல்னி உயிரிழந்துள்ளார். சமீபகலமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர், தற்போது சிறையிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை அவரது இறப்பிற்கான காரணம் வெளியிடப்படவில்லை. அலெக்ஸி நவல்னியின் மனைவி, புதின் தான் தனது கணவர் இறப்பிற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.