விண்வெளி சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களைக் குறிவைக்க பயன்படுத்தக்கூடிய விண்வெளி ஆயுத சோதனையை ரஷ்யா செய்ததாக அமெரிக்காவும், இங்கிலாந்தும் குற்றம் சாட்டியுள்ளன.
அமெரிக்கா, ரஷ்யா இடையே நீண்ட காலமாக நிலவி வரும் ஆயுதப்போட்டி தற்போது விண்வெளி வரை சென்றுள்ளது. விண்வெளியில் சுற்றிவரும் செயற்கைக்கோள்களைத் தாக்கும் சக்தி கொண்ட ஆயுதங்களை ரஷ்யா தயாரிப்பதாக அமெரிக்கா சமீப காலமாக குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில், புதிய ரஷ்ய செயற்கைக்கோள் செயல்பாடு குறித்து அமெரிக்கா தற்போது புகார் தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை ரஷ்யாவின் இந்த செயல்பாடுகள் குறித்து எதுவும் கருத்து தெரிவிக்காத இங்கிலாந்தும் தற்போது ரஷ்யா மீது குற்றம் சுமத்தியுள்ளது. இதுகுறித்து புதிய அமெரிக்க விண்வெளிப் படையின் தலைவரான ஜெனரல் ஜான் ரேமண்ட் கூறுகையில், “ஜூலை 15 ஆம் தேதி இந்த சோதனை நடந்ததாக தெரிகிறது. விண்வெளி அடிப்படையிலான அமைப்புகளை அபிவிருத்தி செய்வதற்கும், சோதனை செய்வதற்கும் ரஷ்யாவின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு அதிக சான்றுகள் உள்ளன. மேலும், அமெரிக்கா மற்றும் அதனுடன் தொடர்புடைய நாடுகளின் விண்வெளி சொத்துகளுக்கு ஆபத்து ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்" எனத் தெரிவித்துள்ளார்.