தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 'ஒமிக்ரான்' எனும் புதிய வகை கரோனா தற்போது உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை உலக நாடுகள் முடுக்கிவிட்டுள்ளன. இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. விமான நிலையங்களில் வெளிநாட்டுப் பயணிகளுக்குக் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில், வெளிநாட்டு விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் தற்போது ஜனவரி மாதம்வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வட மாநிலங்களில் கரோனா தொற்று கடந்த இரண்டு தினங்களாக அதிகரித்துவருகிறது. மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை சீராக அதிகரித்துவருகிறது. தற்போது ஆந்திர மாநிலத்திலும் ஒமிக்ரான் தொற்று பாதித்த முதல் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் சில மருத்துவ அய்வு நிறுவனங்கள், ஒமிக்ரான் தொற்று எதிர்பார்க்கும் அளவுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது, உயிரிழப்பு எண்ணிக்கையும் மிக மிக குறைவாக இருக்கும். இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் நிலைமை மாறலாம் என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனம் தற்போது புதிய தகவலைத் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒமிக்ரான் தொற்று தடுப்பூசியின் செயல்திறனை வெகுவாக குறைப்பதாகவும், இந்த தொற்று சமூகப் பரவலாக உருவெடுத்தால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், டெல்டா வைரஸை விட இது மிகவும் அபாயகரமான வைரஸ் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.