அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த வாரம் ஐரோப்பா சென்று நேட்டோ நாடுகளின் தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் நேரடியாகப் பங்கேற்கவில்லை. எனினும், உக்ரைன் நாட்டிற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் பொருளாதார உதவிகளை நேட்டோ நாடுகள் வழங்கி வருகின்றன. இந்த நிலையில், மார்ச் மாதம் 24- ஆம் தேதி நேட்டோ நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்பார் என்று நேட்டோ அமைப்பின் செயலாளர் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலினால் ஏற்படும் விளைவுகள், உக்ரைனுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குவது, நேட்டோ படைகளை வலுப்படுத்துவது குறித்து பேசப்படும் என்று ஜேன்ஸ் ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்திருக்கிறார்.
இந்த சூழலில், போலந்து, செக் குடியரசு, ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் பிரதமர்கள் உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவிற்கு சென்றுள்ளனர். ரஷ்யப் படைகள் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், பாதுகாப்பு அபாயத்தை மீறி இந்த பயணத்தை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்த பயணத்தை மேற்கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கள் நாட்டிற்கு ஆதரவு தருமாறு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அண்மையில் உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.